ஜெயிலர் படம் ரிலீசானதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இமயமலைக்கு செல்லும் ரஜினியுடன் டேராடூன் விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், மிர்னா, வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


நேர்மையாக இருக்கும் போலீஸ் அதிகாரியான தனது மகனுக்கு எதிரிகளால் வரும் ஆபத்தை தடுப்பதுடன், குடும்பத்தை காக்க தந்தை போராடுவதே ஜெயிலர் படத்தின் கதைக்களம். வழக்கமான ரஜினி ஸ்டைலும், அனிருத்தின் ராக் மியூக்கும் ஜெயிலர் படத்தைக் கொண்டாட வைத்துள்ளது. படத்தை காட்சிக்கு காட்சி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


படத்தில் இடம்பெற்றுள்ள காவலா மற்றும் ‘தலைவரு அலப்பறை’ பாடல்கள் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. இப்படி ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், எந்தவித அலப்பறையும் இல்லாமல் ரஜினி அமைதியாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ளார். நேற்று முன் தினம் சென்னையில் இருந்து இமயமலைக்கு புறப்பட்ட ரஜினி டேராடூன் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். 


டேராடூன் விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் உற்சாகத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், அவருடன் கைக்குலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். ஒருவர் ஓடி வந்து ரஜினிக்கு மலர்மாலை அணிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட நிலையில், அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்ட ரஜினி, அந்த ரசிகர் தந்த மலர் மாலையை அணிந்து கொண்டார். பின்னர், ஒரு சில ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 






ரஜினியின் இந்த எளிமையும் அவரது மென்மையான அணுகுமுறையும் ரசிகர்களை அவரை மேலும் கொண்டாட வைத்துள்ளது. ரஜினியின் இந்த குணத்தை பார்த்த ரசிர்கள் தலைவர் ‘எப்பொழுதுமே நிரந்தரம்’ தான் எனக் கூறி வருகின்றனர். முன்பெல்லாம் திரைப்படத்தில் நடித்ததும் இமயமலைக்குச் சென்று பாபாஜி குகையில் ஆன்மீக தியானம் செய்வதை ரஜினி வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பாக ரஜினி இமயமலைக்கு சென்றிருந்தார். 


அதன் பின்னர், கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதை ரஜினி தவிர்த்து இருந்தார். இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீசை தொடர்ந்து மீண்டும் இமயமலை பயணத்தை ரஜினி தொடங்கி உள்ளார். முன்னதாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ரஜினி சிறிது நாட்கள் ஓய்வு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!


Google Jailer Thalaivar Nirandharam : "தலைவர் நிரந்தரம்.." ரஜினி ரசிகராக மாறிய கூகுள்.... களைகட்டும் ஜெயிலர் திருவிழா!