நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது திரைப்படமாக ஜெயிலர் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர்கள் மோகன் லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ் குமார், சுனில், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி என பல மொழி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். சென்ற ஆண்டு வெளியான பீஸ்ட் படத்துக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், மற்றொருபுறம் இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு திரையரங்குகளில் படத்தின் முதல் காட்சி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக ரஜினியின் ரசிகராக அவரை ரசித்து ரசித்து நெல்சன் படமாக்கியிருக்கிறார் என்றும், விண்டேஜ் ரஜினி இப்படத்தில் மாஸாக திரும்பியுள்ளார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் பட ஹாஷ்டேகுகள், ரஜினி ஹாஷ்டேகுகள் உடன் ‘தலைவர் நிரந்தரம்’ எனும் வசனம் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது கூகுள் இந்தியா தலைவர் நிரந்தரம் என ட்வீட் செய்துள்ளது. அண்ணாத்த திரைப்படம் 2021ஆம் ஆண்டு 4ஆம் தேதி வெளியான நிலையில், அப்படம் வெளியாகி 644 நாள்கள் கழித்து தற்போது ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது என்றும் வெயிட் பண்ணுவது முடிந்தது என்றும் கூகுள் இந்தியா ட்வீட் செய்துள்ளது.
இந்நிலையில் தலைவர் நிரந்தரம் என கூகுள் பக்கமே ட்வீட் செய்துள்ளது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல் இசையமைப்பாளர் அனிருத் முன்னதாக “தலைவர் நிரந்தரம். நெல்சா” என நெல்சனுக்கு வெற்றிக் கோப்பை வழங்குவது போல் பதிவிட்டிருந்தார்.
இதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபுவும் "தலைவர் நிரந்தரம்" எனும் வாசகத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், "ஜெயிலர் பார்த்தேன். விவரிக்க வார்த்தைகள் இல்லை, கூஸ்பம்ப்ஸ், தலைவர் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நெருப்பு போல் இருக்கிறார்.
நெல்சன் அற்புதமாக எழுதி இருக்கிறார். உங்கள் ஹுயூமரை ரசித்தேன் . அனிருத் சிறப்பான இசை. சன்பிச்சர்ஸ், நடிகர்கள், படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். தெறி மாஸ் தலைவர் படம்" எனப் பதிவிட்டுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ராஃப், சுனில், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகம், சரவணன், சுனில் குமார், மிர்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன், ஆர் நிர்மல் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ஜெயிலர் இன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு இன்று படத்தைப் பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
ரசிகர்களைப் போலவே பல பிரபலங்களும் திரையரங்குகளுக்கு ஜெயிலர் படம் பார்க்க படையெடுத்து வருகின்றனர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் அவர்களது மகன்கள் யாத்ரா, லிங்கா, மதுவந்தி உள்ளிட்ட பலரும் ரோகிணி திரையரங்கில் படம் பார்த்து மகிழ்ந்ததுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் ரம்யா கிருஷ்ணன், நடிகர் கவின், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் இன்று முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்தனர்.