Rahay Fateh Ali Khan: தனது உதவியாளரை காலணியால் அடித்து துன்புறுத்தியதற்காக பாடகர் ரஹத் ஃபதே அலி கான் மன்னிப்பு கேட்டுள்ளார். 

 

பிரபல பாகிஸ்தானி பாடகரான ரஹத் ஃபதே அலிகான், இந்தியில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். புகழ்பெற்ற கவ்வாலி பாடகரான ஃபதே அலிகானின் பேரனான ரஹத், பாடிய இந்தி பாடல்களுக்கு ஏராளமான வரவேற்புகள் உள்ளன. இந்த நிலையில், ரஹத் ஃபதே அலி கான் தனது உதவியாளர்களில் ஒருவரை கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்தது. 





 

ரஹத் தனது உதவியாளர்களில் ஒருவரான நவீத் என்பவரை தனது காலணியால் தாக்கியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியானதால் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். உதவியாளரிடம் கடுமையாக நடந்து கொண்ட ரஹத் ஃபதே அலிகான், இங்கிலாந்து அரசர் சார்லஸின் பிரிட்டீஷ் ஆசிய அறக்கட்டளையின் தூதர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், ரஹத் ஃபதே அலி கானின் தொடர்புகளைத் துண்டித்து கொள்வதாகவும் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

 

இந்த சூழலில், நடந்த சம்பவத்துக்கு ரஹத் ஃபதே அலி கான் மன்னிப்பு கோரிள்ளார். அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “நான் என்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்க விரும்புறேன். இறைவனிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ஒரு மனிதனாகவும், கலைஞனாகவும் நான் இப்படி செய்திருக்க கூடாது. இப்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ 9 மாதங்களுக்கு முன்பு பழையது. அப்போதே அவரிடம் நான் மன்னிப்பு கேட்டு விட்டேன். நான் அவருடைய குரு. அதேநேரம் அப்பாவாகவும் நடந்து கொண்டேன். 

 

நவீத்தின் தந்தை எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். நான் அவரது குடும்பத்துக்கு செய்த உதவிகளை மீடியாவில் சொல்ல விரும்பவில்லை. விளம்பரத்துக்காக நான் எதையும் செய்யவில்லை” எனப் பேசியுள்ளார்.