பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அல்வா கிண்டியுள்ளனர்:
இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ”ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி” என தெரிவித்துள்ளார்.
இல்லா நிலை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக, “ கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை! இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது.
மகளிர், இளைஞர், உழவர்கள், ஏழைகள் ஆகிய நான்கு பிரிவினரையும் 'நான்கு சாதிகள்' என்று குறிப்பிட்டு, பட்ஜெட் உரையிலேயே நால்வருணக் கோட்பாட்டை நிதியமைச்சர் அவர்கள் திணித்திருப்பது பிற்போக்குத்தனமானது! கண்டனத்திற்குரியது! இதன் மூலம் பா.ஜ.க.வின் 'சமூகநீதி' எத்தகையது என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. இவர்களால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது! புதிய இந்தியாவை I.N.D.I.A கூட்டணிதான் உருவாக்கும்" எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா, “ 2024 ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; அவர்களின் ஒட்டுமொத்த ஆட்சியே மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இல்லை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் வரவிருக்க கூடிய தேர்தலில் ஒரு நல்ல அரசு உருவாவதற்கான தீர்ப்பை தருவார்கள்” என தெரிவித்துள்ளார்.