தமிழ் சினிமாவில் மிகவும் குறைவான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ஹிட் கொடுத்த கதைக்களம் என்றால் அது கிரிக்கெட். கிரிக்கெட்டை மையக்கதையாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் இங்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஒரு அரசியல் கருத்தினை பேசும் படமாக இருந்தாலும், படத்தின் முக்கிய அங்கமாக இருப்பது கிரிக்கெட். இப்படியான நிலையில் கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து டெஸ்ட் திரைப்படம் உருவாகி வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெள்ளித்திரையில் மீண்டும் கால்பதிக்கவுள்ள மீரா ஜாஸ்மின் என படத்தில் நடிக்கும் நடிகர்களுக்காகவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, படத்தின் மையக் கதை கிரிக்கெட்டை வைத்து என்பதால், படத்தின் மீதான ஆர்வம் எகிறியுள்ளது. இந்நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்தது என படக்குழு தெரிவித்துள்ளது.
Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த டெஸ்ட் படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
மாதவன், சித்தார்த், நடிகை நயன்தாரா ஆகிய 3 பேரும் ஒன்றாக இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் ஆயுத எழுத்து மற்றும் ரங் தே பசந்தி என்ற இந்தி படம் ஆகியவற்றுக்குப் பிறகு மாதவன் மற்றும் சித்தார்த் இருவரும் நடிக்கும் 3வது படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும் நடிகை ராஷி கண்ணா முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான டெஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டரில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் யாரோ ஒருவர் பந்தை அடிப்பது போன்றும், ரசிகர்களின் ஆரவார சத்தங்களும் இருப்பது போன்ற பிண்ணனியில் மாதவன் , நயன்தாரா , சித்தார்த் ஆகியோரின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சிவா, திஷா பாண்டே நடிப்பில் வெளியான “தமிழ் படம்” மூலம் தமிழ் சினிமாவில் YNOT ஸ்டுடியோ நிறுவனம் கால் பதித்தது. தொடர்ந்து வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத் தலைவன், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, தமிழ் படம் 2 , கேம் ஓவர், ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம், கடசீல பிரியாணி, தலைக்கூத்தல் ஆகிய பல படங்களை தயாரித்தது. மேலும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை விநியோகிப்பதிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.