Raghava Lawrence: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகனின் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பம் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், தமிழ் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் மறைவுச் செய்தியை அறிந்ததும் விஜய் முதல் கமல், ரஜினி வரை அனைத்து நடிகர்களும், சினிமா துறைப் பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

 

விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்ட ராகவா லாரன்ஸ், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் தான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

 

அந்த வகையில் தான் அளித்த வாக்குறுதியின்படி, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. படைத் தலைவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் 3 நாட்கள் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜயகாந்த் மகனுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். 

 

சண்முக பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக விஜயகாந்த் மறைந்தார். அந்த துயர சம்பவத்தில் இருந்து விஜயகாந்த் குடும்பம் இயல்பு நிலைக்கு வரும் நிலையில், சண்முக பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்போது சண்முக பாண்டியனுடன் ராகவா லாரன்ஸூம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தை இயக்குகிறார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு, எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு  வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக சகாப்தம், மதுரை வீரன் உள்ளிட்ட படங்களில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார்.