முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.


சார்பட்டா பரம்பரை


பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா இப்படத்தில் கபிலன் என்கிற முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். கலையரசன், பசுபதி, துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், ஜான் கொக்கன், ஷபீர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.


கொரோனா நோய் தொற்று காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியது. 70களில் சென்னையில் பிரபல விளையாட்டாக இருந்த குத்துச் சண்டைப் போட்டி. அதை மையமாக வைத்து உருவான குழுக்கள், அவர்களுக்கு இடையில் சாதிய ரீதியாக இருந்த ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து சார்பட்டா படத்தை ரஞ்சித் உருவாக்கினார். எழுத்தாளர் தமிழ் பிரபா இந்தப் படத்திற்கான திரைக்கதையை ரஞ்சித்துடன் இணைந்து எழுதினார்.


ஆர்யாவின் தோற்றம்


ஒரு பக்கம் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி மாதிரியான கமர்ஷியல் வெற்றிப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் ஆர்யா. அதே நேரத்தில் அவன் இவன், நான் கடவுள், மகாமுனி என முற்றிலும் மாறுபட்ட அதே நேரத்தில் சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறவர். இப்படியான நிலையில் கமர்ஷியலாகவும் அதே நேரத்தில் தனித்துவமான ஒரு படமாகவும் சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு அமைந்தது.


இந்தப் படத்திற்காக தனது உடலை கடினமான பயிற்சிகளின் மூலம்  தயார் செய்தார். கபிலன் என்கிற அவரது கதாபாத்திரம் ஆதிக்க சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒருவன், தனது குருவுக்காக குத்துச் சண்டை போட்டி வழியாக தனக்கான அடையாளத்தை தேடிக் கொள்வதை பற்றியதாக அமைந்திருந்தது. ஆர்யாவின் கதாபாத்திரம் மட்டுமில்லாமல் இந்தப் படத்தில் டான்ஸிங் ரோஸ், வேம்புலி என பலவிதமான தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் மெருகேற்றி இருந்தார் இயக்குநர் ரஞ்சித்.


சார்பட்டா 2


2021ஆம் ஆண்டு  ஓடிடியில் வெளியாகி வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்ற இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்க முடியாதது குறித்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸாக உருவாக இருப்பதாக இடைபட்ட காலத்தில் தகவல்கள் வெளியாகின.


அடுத்தபடியாக வெப் சீரிஸாக இல்லாமல் முழு நீள படமாக சார்பட்டா படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது. தற்போது நடிகர் ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்காக கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.






இயக்குநர் ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளீல் பிஸியாக இருப்பதால் தனது அடுத்த படம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கவில்லை. விரைவில் சார்பட்டா 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.