அனிமல் படத்தில் நீங்கள் நடித்திருந்தால் அந்தப் படம் எப்படி இருந்திருக்கும்? என்கிற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார் நானி


நானி


ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “நான்  ஈ” படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டவர் நானி . தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் நானி. ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என அவர் நடிப்பில் வெளியாகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது நானியின் 30-வது படமாக சமீபத்தில்  வெளியான படம் ஹாய் நானா.


 நானி , மிருணால் தாக்கூர், ஜெயராம், பேபி கியாரா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி  வெளியான ஹாய் நானா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படத்திற்கு  ஹசீம் அப்துல் வஹாப்  இசையமைத்துள்ளார்.


திரையரங்கில் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் வெற்றி மூலம் மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு வந்துள்ளார் நானி. சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் நடிப்பில் இருக்கும் சவால்கள், தான் ஏற்று நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அவர். இந்த உரையாடலில் சமீபத்தில் அதிகளவில் சர்ச்சைக்கு உள்ளான அனிமல் படத்தைப் பற்றியும் பேசினார்.


ரன்பிர் கபூர் நடித்து கடந்த ஆண்டு வெளியான அனிமல் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இப்படம்  திரையரங்கத்தில் 900 கோடிகளை வசூல் செய்திருந்தாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பிரபல நடிகர்கள் , இயக்குநர்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


 நானி இந்தப் படத்தில் நடித்திருந்தால்..


தனது ஒவ்வொரு படத்திலும் சிக்கலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் சவாலை விரும்புபவர் நடிகர் நானி. ஒருவேளை அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் நடித்த ரன்விஜய் சிங் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தை எப்படி அணுகியிருப்பார் என்கிற கேள்விக்கு  நானி இப்படி பதில் கொடுத்துள்ளார்.


“ சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் எப்போதும் எனக்கு ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது. ஒருவேளை அனிமல் படம் அதே அழுத்தமான கதாபாத்திர அமைப்புடன் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் நான் அதில் நடித்திருப்பேன்.  இப்படியான ஒரு கதையில், நான் நடிக்கும் விதம் நிச்சயம் ரன்பீர் கபூர் நடித்ததைவிட, வேறுபட்டதாக இருந்திருக்கும் . மேலும் இந்த மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது அதில் ஒரு தனித்துவமான ஆற்றல் வெளிப்படும் என்று  நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.