ரசிகர்கள் அனைவராலும் நடிகராக அறியப்பட்ட ஜி.மாரிமுத்து முதன்முதலாக சென்னைக்கு தனது சொந்த ஊரான தேனியில் இருந்து ஓடிவந்தது, இயக்குநர் ஆகவேண்டும் என்கிற கனவை நிஜமாக்கத்தான்.
மாரிமுத்து இயக்கிய இரண்டு திரைப்படங்கள் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால்.
ஜி. மாரிமுத்து
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டுசெல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இன்று மாலை அவரது உடலை சொந்த ஊரான மதுரை தேனி வருச நாட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
இயக்குநராகும் கனவு
தேனியை சொந்த ஊராக கொண்ட மாரிமுத்து இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் தனது வீட்டைவிட்டு ஓடி சென்னை வந்து சேர்ந்தார். சில காலங்கள் வைரமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டு ராஜ்கிரண் நடித்த அரன்மனைக் கிளி மற்றும் எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த் இயக்கிய ஆசை திரைப்படத்திலும், சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படத்திலும், உதவி இயக்குநராக பணியாற்றினார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மனிரத்னம், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியுள்ளார்.
கண்ணும் கண்ணும்
2008-ஆம் ஆண்டு தனது முதல் படமான கண்ணும் கண்ணும் படத்தை இயக்கியவர் மாரிமுத்து. பிரசன்னா, உதயதாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்த இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் ‘கிணத்த காணாம் “ காமெடி ரசிகர்களிடையே பயங்கரமான ரீச் ஆனது
புலிவால்
விமல் , பிரசன்னா, இனியா, ஓவியா , சூரி உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான புலிவால் திரைப்படத்தை இயக்கினார் மாரிமுத்து. தனது இரண்டாவது படத்தின் வசூல் ரீதியிலான தோல்வியைத் தொடர்ந்து இயக்கத்தை கைவிட்ட மாரிமுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.