ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். பயணத்திற்கு முன்பு அதிபர் ஜோ பைடனுக்கு எடுத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான நிலையில் மாநாட்டில் பங்கேற்க இந்தியா கிளம்பினார். 


ஜி20 மாநாட்டில் பங்கேற்க இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்கள் இந்தியாவில் ஜோ பைடன் இருப்பார். இவரது வருகையை ஒட்டி பல அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 






பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இரவு உணவிற்கு அழைத்துள்ளார். அதன்படி, இரு தலைவர்களும் இன்று (செப்டம்பர் 8) இரவு 7.30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் சந்தித்துப் பேசுகின்றனர். ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது கிளம்பியுள்ள ஜோ பைடன் மாலையில் இந்தியா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியுடன் இரவு உணவு சாப்பிடுவார். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இன்று இருதரப்பு சந்திப்பும் நடக்கிறது.


அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடனின் முதல் இந்தியா பயணம் இதுவாகும். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா வந்தார். மேலும், ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடியின் இரண்டாவது சிறப்பு விருந்து இதுவாகும். மூன்று மாதங்களுக்கு முன், பிரதமர் மோடியின் அரசுப் பயணத்தின்போது, ​​ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் அவருக்காக சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ​​இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மற்றும் உத்தி கூட்டாண்மையை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. 


எரிசக்தி, வர்த்தகம், உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்ற துறைகளில் நடந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனுடன், உலகின் சில கடுமையான சவால்களைச் சமாளிப்பதில் இரு நாடுகளும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை பற்றியும் இரு தலைவர்களும் விவாதிக்கலாம். அதன்படி, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் நடந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடென் இடையேயான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.


வெள்ளை மாளிகை தரப்பில் சொன்னது என்ன..? 


அதிபர் ஜோ பைடன் இந்தியா கிளம்புவதற்கு முன்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்ததாவது, “இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டிற்கு தலைமை தாங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் இந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமான மாநாட்டை நடத்துவதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வருகையின் போது, அதிபர் பைடனும்  பிரதமரும் உச்சிமாநாட்டில் பொதுவான முன்னுரிமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டனர்” என்று தெரிவித்தார். 


ஜி 20 எந்தெந்த நாடுகள் உள்ளது..? 


ஜி20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உள்ளன.