இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஒரு மணி நேரம் கழித்து அவரது சொந்த ஊரான மதுரை தேனி வருச நாட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
யார் இந்த மாரிமுத்து..?
’அரண்மனை கிளி’ (1993) மற்றும் ‘எல்லாமே என் ராசாதான்’ (1995) போன்ற ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மாரிமுத்து. அதன்பிறகு, ஓரிரு திரைப்படங்களையும் இயக்கிய இயக்குநர் மாரிமுத்து 'யுத்தம் செய்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’எதிர் நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடம் பிரபலமானார்.
எதிர்நீச்சல் தொடர் இவருக்கு கொடுத்த அடையாளம்:
இயக்குநர் மாரிமுத்து பல்வேறு படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர்தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது. இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி, வாய் நிறைய இவரின் ‘இந்தா மா ஏய்’ என்ற வார்த்தையை ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள். எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, அதிக ரசிகர்களையும் இவர் பக்கம் கொண்டு வந்தது. ஒரு நெகட்டிவ் கேரக்டர் இந்த அளவிற்கு மக்கள் ரசிப்பதற்கு மாரிமுத்துவின் அசாத்திய நடிப்பு திறமைதான் காரணம். சோஷியல் மீடியாக்களில் இவரின் ஏராளமான தக் லைப் ,மீம்களையும் சேர் செய்து நெட்டிசன்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது இவரின் சோக செய்தியையும் வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றன.