பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நேற்று அதாவது செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே ஆவலுடன் காத்திருந்தது. 


குறிப்பாக ஷாரூக்கானின் பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் அதிகமாகவே இருந்தது. படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார் ஷாரூக். படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 




அதேபோல், உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் முதல் காட்சி ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருப்பதால், படத்தின் வசூல் என்ன என்ற கேள்வி ஏற்பட்டது. 


இந்நிலையில் தற்போது ஆங்கில ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் ஜவான் திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆஃபீசில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 150 கோடி வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படம் இந்தியாவில் 75 கோடி ரூபாய் வசூலித்தது எனவும் உலகம் முழுவதும்  ரூபாய்150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த கலெக்‌ஷன் என்பது இதுவரை பாலிவுட் வட்டாரத்தில் எந்த படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்தது இல்லை என்பதால் ஜவான் படத்தின் வசூல் குறித்த பேச்சு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. 


ஜவான் ஆஸ்திரேலியாவில் AUD 400,000 வசூலித்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 300 கோடி என கூறப்படும் நிலையில், முதல் நாள கலெக்‌ஷனே படத்தின் பாதி பட்ஜெட்டை வசூல் செய்து கொடுத்துள்ளதால், இந்த வீக் எண்டிற்குள் செலவிடப்பட்ட மொத்த பட்ஜெட்டும் வசூல் செய்யப்பட்டு விடும் எனவும் அதன் பின்னர் லாபத்தை எண்ணவேண்டியதுதான் படக்குழுவின் வேலை எனவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.  




கொண்டாட்டத்தில் ஷாரூக் ரசிகர்கள்


ஷாரூக்கானின் பதான் திரைப்படம் தான் ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம். இப்படம் மொத்தம் ரூபாய் 800 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் ஜவான் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் ரூபாய் 150 கோடியை தொட்டுள்ளதால் ஷாரூக் ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டுள்ளனர்.