ராஜ்கிரண்
சினிமா விநியோக நிறுவனத்தில் தினக்கூலி வேலைக்கு சேர்ந்து, பிற்காலத்தில் சினிமாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு, தனியாக ஒரு சினிமா விநியோக கம்பெனியைத் தொடங்கியவர் நடிகர் ராஜ்கிரண் (Rajkiran). அங்கு தொடங்கிய அவரின் சினிமா பயணம் இன்றும் தொடர்கிறது.
ராமராஜன் நடிப்பில் வெளியான 'என்ன பெத்த ராசா' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய அவர் அடுத்த பரிமாணமாக 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என அடுத்தடுத்தப் படங்களை தயாரித்து அதில் நடிக்கவும் செய்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
ஆக்ஷன், செண்டிமெண்ட் என்றாலே ராஜ்கிரண் படம் தான் . ராஜ்கிரண் படம் என்றால் பெண்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து சினிமா கொட்டகைக்கு போய் படம் பார்த்த கதைகள் ஏராளம் இருக்கின்றன. மூன்றே படங்களில் ஹிட் கொடுத்த ராஜ்கிரண், அன்றைய முன்னணி நடிகராக இருந்த ரஜினிகாந்தை விட அதிகம் சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒரு நிகழ்வை தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார் தயாரிப்பாளர் டி சிவா.
ரஜினியை விட அதிக சம்பளம் கேட்ட ராஜ்கிரண்
நடிகர் சித்ரா லட்சுமணன் உடனான ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் டி சிவா "1996ஆம் ஆண்டு ரஜினியின் சம்பளம் ஒரு கோடி. அப்போது என்னுடைய முதல் படத்தின் இயக்குநர் நேதாஜி என் நெருங்கிய நண்பர் அவரும் நானும் சேர்ந்து ராஜ்கிரண் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வோம். அங்கிருந்து பீச் ரோட்டில் இருக்கும் புஹாரி ஹோட்டலில் சாப்பிட்டு நிறைய கதைகளை பேசுவோம்.
அப்போது நான் ராஜ்கிரணிடம் மாணிக்கம் படத்தின் கதையை சொன்னேன். கதைகேட்ட ராஜ்கிரண் தான் நடிப்பதாகவும் ரஜினியின் சம்பளம் ஒரு கோடி அதைவிட 10 லட்சம் அதிகமாக தனக்கு சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று சொன்னார். எனக்கும் வேற வழியில்லை. ஏனென்றால் அடுத்தடுத்து மூன்று சில்வர் ஜுப்லீ ஹிட் கொடுத்தவர் ராஜ்கிரண். அவர் என் படத்தில் நடிக்கிறார் என்றால் அது பெரிய விஷயம். நானும் உடனே சரி என்றேன். சினிமா துறையில் இருந்த எல்லா நடிகர்களும் என்னைத் திட்டினார்கள். அத்தனை திட்டுகளையும் வாங்கிக் கொண்டுதான் இந்த மாணிக்கம் படத்தை தயாரித்தேன்." என்று டி சிவா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Garudan Movie Review: நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!