தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் நேற்று நிறைவு பெற்றது. மக்களவை தேர்தலுடன் ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடந்த அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. 


வெளியான தேர்தல் முடிவுகள்: சிக்கிமை பொறுத்தவரையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. பிரேம் சிங் தமாங் தலைமையிலான SKM 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 32 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக 31 தொகுதிகளிலும் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 


அதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் அருணாச்சல் மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்திலும் சுயேட்சை 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். 


பிரதமர் மோடி கூறியது என்ன? இந்த நிலையில், அருணாச்சல பிரதேச தேர்தல் முடிவு குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, "தீர்க்கமான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்" என்றார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட அவர், "நன்றி அருணாச்சல பிரதேசம்! வளர்ச்சி அரசியலுக்கு தீர்க்கமான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.  நம்பிக்கையை மீட்டெடுத்ததற்காக அருணாச்சல பிரதேச பாஜகவுக்கு என் நன்றிகள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்" என பதிவிட்டுள்ளார்.


 






சிக்கிம் தேர்தல் முடிவு குறித்து பதிவிட்ட பிரதமர், "சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் 2024இல் வெற்றி பெற்றதற்காக SKM மற்றும் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்-க்கு வாழ்த்துகள். வரும் காலங்களில் சிக்கிம் மாநிலத்தின் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.