Elon Musk: உலக பணக்காரர்கள் பட்டியலில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், மீண்டும் முதலிடம் பிடித்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில், பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார். தற்போதைய சூழலில் அவரது சொத்து மதிப்பு 210.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம்:

டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆகியுள்ளார்.  ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியல் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 210.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளடு.  அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள அர்னால்ட் 201 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்துகளையும், மூன்றாவது இடத்தில் உள்ள பெசோஸ் 197.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்துகளையும் கொண்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தற்போது, டெஸ்லா, டிவிட்டர்  மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற பல நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார். முன்னதாக அக்டோபர் 2022 இல் அவர் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து சமூக வலைதளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) ஐ வாங்கினார்.

டாப் 10 பணக்காரர்கள்:

மே 31, 2024 நிலவரப்படி, ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் பட்டியலின் தரவரிசை பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் இருப்பதைக் காட்டியது. அர்னால்ட் மற்றும் பெசோஸ் ஆகியோருக்குப் பிறகு, மார்க் ஜுக்கர்பெர்க் 163.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். லாரி எலிசன் 146.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

லாரி பேஜ் $142.6 பில்லியன் சொத்து மதிப்புடன் பட்டியலில் ஆறாவது இடத்தையும், ஏழாவது இடத்தில் செர்ஜி பிரின் $136.6 பில்லியன் சொத்து மதிப்பையும் பெற்றுள்ளார். வாரன் பஃபெட் 134.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தார், பில் கேட்ஸ் 128.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். ஸ்டீவ் பால்மர் 123.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் 10 இடங்களுக்குள் கடைசியாக இருந்தார்.

ஃபோர்ப்ஸ் படி, உலகின் பணக்காரர்கள்

பெயர்கள் நிகர மதிப்பு
எலோன் மஸ்க்  $210.7 பில்லியன்
பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் $201 பில்லியன்
ஜெஃப் பெசோஸ்  $197.4 பில்லியன்
மார்க் ஜுக்கர்பெர்க் $163.9 பில்லியன்
லாரி எலிசன் $146.2 பில்லியன்
லாரி பேஜ் $142.6 பில்லியன்
செர்ஜி பிரின் $136.6 பில்லியன்
வாரன் பஃபெட் $134.9 பில்லியன்
பில் கேட்ஸ் $128.6 பில்லியன்
ஸ்டீவ் பால்மர் $123.1 பில்லியன்

(ஆதாரம்: ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர் பட்டியல்)