Hit List Movie Review: தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா. இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட்லிஸ்ட். இயக்குனராக பல வெற்றிகளை சூடிய இயக்குனரின் மகன் தன் முதல் படத்தில் கதாநாயகனாக வெற்றி பெற்றாரா? ஹிட் லிஸ்ட் படம் ஹிட் அடிக்குமா? என்பதை கீழே காணலாம்.


படத்தின் கதை:


கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று கருதுபவரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து வாழும் மென்பொறியாளர் நாயகன் விஜய். இவரது அம்மா சித்தாரா, தங்கை என அமைதியாக வாழும் ஒரு குடும்பம்.


அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை சம்பாதித்து மிகவும் நல்லவர் என்ற பெயருடன் வாழும் நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார்? அந்த மர்மநபர் எதற்கு சைவ உணவை மட்டுமே உண்டு, சிறு எறும்பைக் கூட கொல்லக்கூடாது என்று வாழும் கொள்கை  கொண்ட நாயகனை கொலை செய்யச் சொல்கிறான்? அந்த முகமூடி அணிந்த மர்மநபரிடம் இருந்து எப்படி நாயகன் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் அந்த யுத்தத்தில் நாயகனை மீட்டு, குற்றவாளியை எப்படி கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்? இதற்கெல்லாம் காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது ஹிட் லிஸ்ட்.


படத்தின் பலம் என்ன?


படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான, அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக நடிப்பில் விக்ரமனின் மகன் என்பதை நிரூபித்துள்ளார். காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மிக அழகாக வௌிப்படுத்தியுள்ளார். முதல் படம், மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்பதால் காதல், டூயட் என கதைக்கு தேவையில்லாத விஷயங்கள் படத்தில் இடம்பெறாதது மிகப்பெரிய பலம்.


குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் மிகப்பெரிய ரவுடியாக உலா வரும் காளிக்கும்( கே.ஜி.எஃப். வில்லன் கருடா ராம்), நாயகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் பாதியில் சரத்குமாருக்கு எந்தவொரு ஆக்‌ஷன் காட்சிகளும் பெரியளவில் இல்லாத நிலையில், இரண்டாம் பாதியில் தொடக்கத்திலே சரத்குமாருக்கு சண்டைக் காட்சிகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.


இரண்டாம் பாதியில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரின் வருகை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவே இருந்தது. குறைந்த நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பையும், முக்கியமான கதாபாத்திரமாகவும் வருகிறார். எதற்காக இது அனைத்தும் நடக்கிறது என்று முகமூடி அணிந்த மர்மநபர் தரும் விளக்கம் யதார்தத்திற்கு நெருக்கமானதாக அமைகிறது. படத்தின் உச்சகட்ட ட்விஸ்டே முகமுடி அணிந்து வரும் மாஸ்க் மேன் யார்? என்பதுதான். சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய  படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களைப் போல, அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.


பலவீனம் என்ன?


படத்தின் மைனசாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான முகமூடி அணிந்த மர்மநபரின் உடல்மொழி ஆங்காங்கே அந்நியன் பட விக்ரமை நினைவுக்கு கொண்டு வருவது. முனீஷ்காந்த், பால சரவணனை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அது படத்தை ஏதும் பாதிக்கவில்லை. நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடக்கத்தில் வரும் காட்சிகள் ஒன்றும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்த காட்சிகளும், கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரியளவு தேவைப்படாத காரணத்தால் படத்தின் வேகம் எந்த இடத்திலும் தடைபடவில்லை. மேலும், ஹேக்கர் என்று அழைத்து வரப்படுபவரின் கதாபாத்திரம் எதற்கு என்பது போல இருந்தது. 


ஹிட் லிஸ்ட் ஹிட் அடிக்குமா?


அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் அனுபவ இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளனர். சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாகும்.


ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லும் ஹிட் லிஸ்ட் படம் குடும்பத்துடன் சென்று ரசித்து பார்ப்பதற்கு நிச்சயம் ஏற்ற படம். பூவே உனக்காக, புது வசந்தம், கோகுலம், சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கிய விக்ரமனின் மகன் கதாநாயகனாக வெற்றி பெறவும் வாழ்த்துகள்.