சத்தம் போடாதே: நடிகர் பிருத்விராஜ், நிதின் சத்யா, பத்மப்பிரியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மாறுபட்ட சைக்கோ த்ரில்லர் படம் ‘சத்தம் போடாதே’. பிரபல இயக்குநர் வசந்த் இயக்கிய இத்திரைப்படம், திரைக்கு வந்து 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
த்ரில்லர் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படம் ரிலீஸுக்கு முன்பு அதிகமாக பேசப்பட்டு இப்படம் எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் தொடக்கம் காஞ்சிபுரத்தில் ஆரம்பிக்கிறது. பானுவான பத்மப்பிரியாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைக்கு தோழனாக வரும் நிதின் சத்யா, ஒரு கட்டத்தில் பத்மப்பிரியாவை திருமணம் செய்து கொள்கிறார். ரயில்வே துறையில் ஹாக்கி வீரராக இருக்கும் நிதின் சத்யாவுடன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் பத்மபிரியா.
சில நாட்களில் நிதின் சத்யாவால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்ற உண்மை தெரிய வருவதால், பத்மப்பிரியாவும் நிதின் சத்யாவும் ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். ஆனால், அந்த குழந்தை தனது குறையை நினைவுப்படுத்துவதாகக் கூறி, அதைத் திரும்ப ஆசிரமத்திலேயே விட்டு விடுகிறார் நிதின் சத்யா. இதற்கிடையே அதிக குடிப்பழக்கத்தால் நிதின் சத்யாவுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டதாக அவருக்கு மருத்துவம் பார்த்த நாசர் மூலம் பத்மபிரியாவுக்கு தெரிய வருகிறது.
தன்னைப் பற்றிய உண்மையை பத்மப்பிரியா தெரிந்து கொண்டதால், அமைதியான கணவராக இருந்த நிதின் சத்யா, வில்லத்தனத்தை காட்ட ஆரம்பிக்கிறார். பத்மப்பிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைப்பதால் இருவருக்கும் விவாகரத்து ஏற்படுகிறது. முதல் பாதி கதை இப்படியாக முடிய, இரண்டாவது பாதியில் பிருத்விராஜ் என்ட்ரி ஆகிறார். பத்மப்பிரியாவின் அண்ணன் மூலம் அவருக்கு பிருத்விராஜ் அறிமுகமாகிறார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் நடக்கிறது.
பத்மப்பிரியாவும் பிருத்விராஜூம் கொச்சிக்கு செல்லும் ரயிலில் எதிர்பாராத விதமாக நிதின் சத்யாவை சந்திக்கின்றனர். நிதின் சத்யா, பிருத்விராஜுக்கு நல்ல நண்பனாக மாறுகிறார். ஆனால், பத்மபிரியா இன்னொரு திருமணம் செய்து கொண்டு வாழ்வதை பொறுத்து கொள்ள முடியாத குரூர எண்ணம் கொண்ட நிதின் சத்யா, வில்லத்தனமாக யோசிக்கிறார்.
பதமப்பிரியாவை கடத்தி செல்லும் நிதின் சத்யா, அவரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார். இதற்கிடையே, மனைவியை காணாமல் தேடும் பிருத்விராஜ், நிதின் சத்யாவின் வீட்டில் இருந்து பத்மப்பிரியாவை மீட்பதே கதையின் கிளைமாக்ஸாக உள்ளது. இருட்டு அறையில் அடைப்பட்டு அலறல் சத்தம் விடும் பத்மபிரியாவின் அச்சம், அடுத்து என்ன நடக்கும், பிருத்விராஜ் பத்மபிரியாவை பார்ப்பாரா, நிதின் சத்யாவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என காட்சிகளில் த்ரில்லரை காட்டி இருப்பார் இயக்குநர் வசந்த்.
படத்திற்கு மற்றொரு பிளஸ்ஸாக யுவன் சங்கர் ராஜாவின் இசை மிரட்டியது. பேசுகிறேன் பாடல் ஒவ்வொருவரையும் தத்துவார்த்தரீதியாக ரசிக்க வைத்தது என்றால், மற்றொருபுறம் ‘அழகுக் குட்டி செல்லம்’ பாடல் குழந்தைகளை விரும்பும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்து கொண்டாட வைத்தது.
பிருத்விராஜ், பத்மப்பிரியா, நிதின் சத்யா என மூவருமே நடிப்பில் உச்சக்கட்டத்தை காட்டி இருப்பார்கள். இப்படி நடிகர்களின் மிரட்டலான நடிப்பு, பின்னணி இசை என ஒட்டுமொத்த படத்தையும் ரசிக்க வைத்த ’சத்தம் போடாதே’ படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மேலும் படிக்க: Priya raman: ரஜினிக்காக பாரதிராஜா தாரைவார்த்த ஹீரோயின்... ஒரே படத்தில் காணாமல் போன பிரியா ராமன்...