நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு எதிராக ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் நான்கு முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக விஷால், சிம்பு, யோகிபாபு, அதர்வா, எஸ்.ஜே சூரியா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையால் இந்த பிரச்சனை ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது.


தற்போது மீண்டும் ஒரு முறை இந்த பிரச்னை எழுந்துள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி சிம்பு, தனுஷ் , விஷால், அதர்வா மொத்தம் நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நடிகருக்கும் ரெட் கார்ட் வழங்குவதற்கு முன்பாக அந்த குறிப்பிட்ட நடிகரிடம் இருந்து தன் தரப்பு விளக்கத்தை கோரும் தயாரிப்பாளர்கள் சங்கம், போதிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவெடுக்கப்படும்.


சிம்பு


AAA படத்தின் படப்பிடிப்பிற்கு சரியாக வராததால் சிம்பு மீது புகார் அளித்தார் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். சிம்புவின் இந்தச் செயலால் 2 கோடி ரூபாய் நஷ்டமடைந்தார் மைக்கேல். மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, சிம்பு படத்திற்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு படப்பிடிப்பிற்கு கால்ஷீட் தர தாமதித்ததால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்தார்.


மேலும் மாநாடு  படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்தார். கடும் போராட்டத்திற்கு பின் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் பத்து தல படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு தாய்லாந்து சுற்றுலா சென்றுவிட்டார் சிம்பு. வேறு வழியில்லாமல் அவர் மீது புகாரளித்தார் தயாரிப்பாளர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவை இரண்டு ஆண்டுகள் டீலில் விட்டார் சிம்பு. மேலும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் சிம்பு மீது ஏற்கெனவே புகார் அளித்துள்ளார்.


தனுஷ்


தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படத்தில் தனுஷ் படப்பிடிப்பிற்கு சரியாக வராத காரணத்தினால் அவர் மீது புகாரளித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.


விஷால்


நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சமயத்தில் நிர்வாகத்தின் பணத்தை சரியான முறையில் பயண்படுத்தாமல் செலவு செய்ததால் நடிகர் விஷாலுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


அதர்வா


நடிகர் அதர்வா படம் தயாரிப்பதாகவும் நடிப்பதாகவும் கூறி ரூ.6.10 கோடி வரை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகாரளித்துள்ளார். சொன்ன தேதியில் படம் வெளியாகாத காரணத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி அவர் புகார் அளித்துள்ளார்.


இது குறித்து அதர்வா தரப்பில் இருந்து முறையான பதில் ஏதும் வராததால் அவருக்கு ரெட் கார்ட் வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது