சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு நடிகராக இந்த திரையுலகமே கொண்டாடி வருகிறது. ஆனால் அவரின் இந்த திரை பயணத்தில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அவரே கதை திரைக்கதை எழுதிய ஒரே திரைப்படம் 1993ம் ஆண்டு வெளியான 'வள்ளி'. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வைத்தே படத்தை உருவாக்கியதாக அவரே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
ஒரு பெண் தன்னை கெடுத்தவனை பழிவாங்குவதற்காக திருமணம் செய்து கொண்டு பின்னர் அவனை கொலை செய்வது போல அமைக்கப்பட்டு இருந்த 'வள்ளி' திரைப்படத்தின் கிளைமாக்ஸ். இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியா ராமன். வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றதால் வெற்றி படமாக 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. இப்படத்தை இயக்கி இருந்தார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நட்ராஜ்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. குறிப்பாக ஸ்வர்ணலதாவின் குரலில் 'என்னுள்ளே என்னுளே...' பாடல் இன்றும் எவெர்க்ரீன் பாடல். இப்படத்தில் லதா ரஜினிகாந்த் கூட ஒருபாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே ரஜினிகாந்த் ஜோடிகளாக நடிக்கும் நடிகைகளுக்கு பெரிய அளவில் திரையுலகில் வரவேற்பு கிடைக்கும். ஆனால் ஆச்சரியமாக அப்படி கிளிக் ஆகாத ஒரு நடிகையும் உள்ளார். அது தான் முகம் தெரியாத ஒரு நடிகையாக வள்ளி படத்தில் அறிமுகமான பிரியா ராமன். அவரின் நடிப்பை கூட ரஜினிகாந்த் பாராட்டி பேசியிருந்தார். ஆனால் உண்மையில் பிரியா ராமனுக்கு ரஜினி படத்தில் நடித்த ஒரே பெருமையை தவிர வேறு எதுவும் வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை.
பெரிய அளவில் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அதற்கு பிறகு கிடைக்க வில்லை. சூர்யவம்சம் திரைப்படத்தில் கௌரி என்ற சிறிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய படத்தில் அறிமுக படுத்திவதற்காக தேர்ந்து எடுத்த நடிகை தான் பிரியராமன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்திற்காக பிரியா ராமனை அவருக்காக விட்டு கொடுத்துள்ளார்.
வெள்ளி திரையில் பெரிய அளவில் வாய்ப்பு அமையாவிட்டாலும் ஒரு பிரேக்குக்கு பிறகு பிரியா ராமனுக்கு சின்னத்திரை நல்ல ஒரு என்ட்ரியை கொடுத்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜீன்ஸ் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார். மிகவும் பிரபலமான தொடராக ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கம்பீரமாக நடித்திருந்தார். இந்த தொடர் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பு என்ற மிக பெரிய பேனரில் நடித்திருந்தாலும் காணாமல் போன ஒரு நடிகையாக இருந்த பிரியா ராமனுக்கு சின்னத்திரை கைகொடுத்து ஜொலிக்க வைத்தது. இவர் நடிகர் ரஞ்சித்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களுக்கு 2014ம் ஆண்டு விவாகரத்து ஆனது.