இயக்குநர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு சலார் படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளது.
பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் படம் மூலம் கன்னட சினிமா தாண்டி நாடு முழுவதும் பெரும் இயக்குநராக உருவெடுத்துள்ள பிரசாந்த் நீல், பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வரும் திரைப்படம் ‘சலார்’. பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ள பிரபாஸூடன் கைக்கோர்த்துள்ள பிரசாந்த் நீலின் இந்தப் படம் மீது எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரமாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். 'கே ஜி எஃப் 2' படத்தின் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு, ஹோம்பாலே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் உடன் மீண்டும் இணைந்துள்ளது இந்திய திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோ பகிர்ந்த படக்குழு
நடிகை ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஆண்டு செப்டெம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் படம் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிஸியான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே பிரசாந்த் நீல் நேற்று தன் 43ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். சலார் ஷூட்டிங் தளத்தில் பிரசாந்த் நீல் ஷூட்டிங்கில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாகப் பகிர்ந்து படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரிலீஸ் எப்போது?
நடிகர் பிரபாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் நீலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், கருப்பு உடை அணிந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பர்சூர் தான் சலார் படத்துக்கும் இசையமைக்கிறார்.
2021ஆம் ஆண்டு முதல் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன் பின் பிரபாஸ் ராதே ஷ்யாம் திரைப்படத்திலும், பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 படத்திலும் பிசியாகிவிட, மீண்டும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.