2021- 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பதிப்பு இதுவாகும். 


2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் லீக் முடிவில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முதல் இரண்டு அணிகளாக தகுதிபெற்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெறுவது இதுவே முதல்முறை. கொரோனா காரணமாக பல தொடர்கள் தாமதமானதால், வெற்றி சதவீதத்தால் முடிவுகள் பெற கடினமானது. 


2021ல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த போட்டியில் நியூசிலாந்திடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 


இந்தநிலையில், இந்திய அணி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு எவ்வாறு தகுதிப்பெற்றது என்பதை பார்க்கலாம். 


உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 5 கேப்டன்கள், 2 பயிற்சியாளர்கள், 6 தொடர்களில் 10 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை கடந்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. சொந்த மண்ணில் நடந்த அனைத்து தொடர்களையும் வென்ற இந்திய அணி, வெளிநாட்டு தொடர்களில் 1 தோல்வி மற்றும் 1 டிராவை சந்தித்தது. 


வெளிநாட்டு தொடர்கள்: 


இங்கிலாந்து நடந்த தொடரை இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தும் தொடரை வெல்ல முடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தும் 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 


இதற்கு இடையில் பயிற்சியாளர்களின் மாற்றம் இந்திய அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பாரத் அருண் விலகிய பிறகு பராஸ் மம்ப்ரே பொறுப்பை ஏற்றார். அதேபோல், ரவி சாஸ்திரியிடம் இருந்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பு ராகுல் டிராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 


6 தொடர்கள் - 5 கேப்டன்கள்: 


2021 ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி கேப்டன்களின் மாற்றத்தால் தத்தளித்தது. தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்த கேப்டன் பதவி ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்ததாக நடந்த இலங்கை தொடரில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. மீண்டும் கோலி கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், கே.எல்.ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினர். 


இந்தியா அணி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 காலக்கட்டத்தில் 18 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 6ல் மட்டுமே ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். அதிகபட்சமாக விராட் கோலி 7 டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கியுள்ளார். கே.எல். ராகுல் 3 போட்டிகளுக்கும், ரஹானே மற்றும் பும்ரா தலா ஒரு போட்டிக்கு தலைமை தாங்கியுள்ளனர். 



  • விராட் கோலி (7)

  • ரோகித் சர்மா (6)

  • கேஎல் ராகுல் (3)

  • அஜிங்க்யா ரஹானே (1)

  • ஜஸ்பிரித் பும்ரா (1)


WTC இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் நடைபாதை: 



  1. டிரா: ஆகஸ்ட் 04, 2021 - இந்தியா vs இங்கிலாந்து (1வது டெஸ்ட்)

  2. வெற்றி: ஆகஸ்ட் 12, 2021 - இந்தியா vs இங்கிலாந்து (2வது டெஸ்ட்)

  3. தோல்வி: ஆகஸ்ட் 25, 2021 - இந்தியா vs இங்கிலாந்து (3வது டெஸ்ட்)

  4. வெற்றி: செப்டம்பர் 02, 2021 - இந்தியா vs இங்கிலாந்து (4வது டெஸ்ட்)

  5. டிரா: நவம்பர் 25, 2021 - இந்தியா vs நியூசிலாந்து (1வது டெஸ்ட்)

  6. வெற்றி: டிசம்பர் 03, 2021- இந்தியா vs நியூசிலாந்து (2வது டெஸ்ட்)

  7. வெற்றி: டிசம்பர் 26, 2021- இந்தியா vs தென்னாப்பிரிக்கா (1வது டெஸ்ட்)

  8. தோல்வி: ஜனவரி 3, 2022 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2வது டெஸ்ட்)

  9. தோல்வி: ஜனவரி 11, 2022 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா (3வது டெஸ்ட்)

  10. வெற்றி: மார்ச் 4, 2022 - இந்தியா vs இலங்கை (1வது டெஸ்ட்)

  11. வெற்றி: மார்ச் 12, 2022 - இந்தியா vs இலங்கை (2வது டெஸ்ட்)

  12. தோல்வி: ஜூலை 1, 2022 - இந்தியா vs இங்கிலாந்து (5வது டெஸ்ட்)

  13. வெற்றி: டிசம்பர் 14, 2022 - இந்தியா vs வங்கதேசம் (1வது டெஸ்ட்)

  14. வெற்றி: டிசம்பர் 22, 2022 - இந்தியா vs வங்கதேசம் (2வது டெஸ்ட்)

  15. வெற்றி: பிப்ரவரி 9, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா (1வது டெஸ்ட்)

  16. வெற்றி: பிப்ரவரி 17, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா (2வது டெஸ்ட்)

  17. தோல்வி: மார்ச் 1, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா (3வது டெஸ்ட்)

  18. டிரா: மார்ச் 9, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா (4வது டெஸ்ட்)