நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கு கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டிலும், பல ஆயிரகணக்கானோர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.


பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்:


தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகள்  மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் இளநிலைப் படிப்புகளில் மட்டும் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழிக் கலந்தாய்வு மூலம்  நிரப்பப்பட்டு வருகின்றன.  2023 ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த 5ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது.


1.86 லட்சம் பேர் விண்ணப்பம்:


இந்த நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க கூடுதல் நபர்கள் விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க மொத்தமாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் எண்ணிக்கை அளவில் 17 ஆயிரத்து 7 எனும் அளவில் அதிகமாகும். அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவர்கள், கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 18 அயிரத்து 822 எனும் அளவிற்கு எண்ணிக்கையில் அதிகமாகும். இதனிடையே, ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 728 பேர் இதுவரை கலந்தாய்விற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். வரும் 9ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரேண்டம் எண் நாளை வெளியீடு:


தொடர்ந்து,  அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை ஒதுக்கப்படுகிறது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் ஜூலை 2ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.


கலந்தாய்வு விவரம்:


முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 5ம் தேதி வரை நடைபெறும். அதைதொடர்ந்து, பொது கலந்தாய்வு 7ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் அடுத்ததாக ஆகஸ்டு மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் துணை கலந்தாய்வில் நிரப்பப்படும். தொடர்ந்து எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி.க்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு முடித்துக்கொள்ளப்படும்.


”எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணம்”


கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் படித்த முடித்த உடனேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தான், மாணவர்கள் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக பேசியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் “கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. உதராணத்திற்கு அண்ணா யூனிவர்சிட்டிக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அதிக நிறுவனங்கள் நேர்காணல் நடத்தியுள்ளதாகவும், வேலை வாய்ப்புகளை வழங்க இன்னும் பல நிறுவனங்கள் வர உள்ளன” எனவும் கூறினார்.