'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் த ஸ்பைடர்வெர்ஸ்' (Spider-Man Across the Spider-Verse)  படத்தின் இரண்டாம் பாகம் முதல் மூன்று நாள்களில் 14 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 


கறுப்பின ஸ்பைடர் மேன்


தோர், அயர்ன் மேன், கேப்டன் மார்வெல் என உலகம் முழுவதும் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஹீரோக்கள் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்தாலும், ஸ்பைடர் மேன் என்றுமே மார்வெல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்.


மார்வெலின் ஆதி சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனைக் கொண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் பல நடிகர்களின் நடிப்பில் ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் வந்திருந்தாலும், காமிக்ஸுக்கு மிக நெருக்கமாக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன்: இன் டு த ஸ்பைடர்வெர்ஸ்’ திரைப்படம் விளங்கி நல்ல வரவேற்பைப் பெற்றது.


வழக்கமாக ஸ்பைடர் மேன் படங்களின் மையக்கதாப்பாத்திரமாக வரும் பீட்டர் பார்க்கருக்கு பதிலாக ‘மைல்ஸ் மொரேல்ஸ்’ எனும் சிறுவனை மையப்படுத்தி அமைந்திருந்ததுடன், கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் படமாகவும் இப்படம் அமைந்தது.


பிரமாண்ட ஓப்பனிங்


‘மல்ட்டி வெர்ஸ்’ கான்செப்ட்டுக்கு மார்வெல் உலகின் அனைத்துப் படங்களுக்கும் முன்னோடியாக விளங்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே, மார்வெல் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். தொடர்ந்து டிச.13ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் தாம்ப்சன் உள்ளிட்ட மூன்று இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் ஜூன் 1ஆம் தேதி வெளியானது.


இந்நிலையில், இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாள் 4.2 கோடிகளையும், இரண்டாம் நாள் 4 கோடிகளையும், மூன்றாம் நாள் 6.16 கோடிகளையும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 


மேலும் நான்காம் நாளான இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அதிக வசூலை இப்படம் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாள்களில் மட்டும் இப்படம் 14 கோடிகளை இந்தியாவில் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை அதிகம் வசூலித்த அனிமேஷன் திரைப்படமாக ஸ்பைடர்மேன் அக்ராஸ் த ஸ்பைடர்வெர்ஸ் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


10 மொழிகளில் இந்தியாவில் வெளியீடு


இந்தியாவில் தமிழ் ,தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஆங்கிலம் என 10 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில்,  இந்த ஆண்டு இந்தியாவில் பெரும் ஓப்பனிங் அமைந்த ஹாலிவுட் படங்களின் வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது. 


2018ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெறும் 9.15 கோடிகளையே வசூலித்த நிலையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் மார்வெல் ரசிகர் படையின் எழுச்சி காரணமாக இப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி வருகிறது. 


இந்நிலையில் உலகம் முழுவதும் ஸ்பைடர்மேன் அக்ராஸ் த ஸ்பைடர்வெர்ஸ் திரைப்படம் 200 மில்லியன் டாலர்கள் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.