நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள ‘போர் தொழில்’ படம் 10வது நாளில் மேட்னி ஷோவில் மட்டும் ரூ.1 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. 


கடந்த ஜூன் 9 ஆம் தேதி அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘போர் தொழில்’ படம் வெளியானது.  E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில்  அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காவல்துறையில் எதிரும், புதிருமாக இருக்கும் அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் எப்படி தொடர்ச்சியாக நடைபெறும் மர்ம கொலைக்கான முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். 


இந்த படம் வெளியான நாள் முதல் வசூலை வாரிக்குவித்து வருகிறது. பாசிட்டிவ் ஆன விமர்சனங்களால் நாளுக்கு நாள் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. இதனால் படத்தின் வசூலில் அதிகரித்து வருகிறது. ஒரு அறிமுக இயக்குநரின் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு புதிய இயக்குநர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் கதை வலுவாக இருந்தால் படம் நிச்சயம் எல்லோராலும் வரவேற்கப்படும் என்பதற்கு போர் தொழில் படம் மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 




சுமார் ஆறு கோடி செலவில்  எடுக்கப்பட்ட போர் தொழில் திரைப்படம் இதுவரை சுமார் 10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இன்று பகல் காட்சிகளில் மட்டும் சுமார் ரூ.1 கோடி வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நினைத்ததை விட பெரிய வெற்றி பெற்றுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தகர் சக்திவேலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  


மேலும் சென்னையில் சில தியேட்டர்களில் இரவு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, நள்ளிரவு காட்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை தவிர்த்து கேரளாவிலும் போர் தொழில் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன் கதைத்தேர்வு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.