பிரபல மலையாள நடிகர் பூஜப்புரா ரவி வயது மூப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பூஜாப்புராவில் பிறந்த ரவியின் இயற்பெயர் ரவீந்திரன் நாயர். புகழ்பெற்ற நாடகப் கலைஞரான கலானிலம் கிருஷ்ணன் நாயரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டார். தனது 16வது வயதில் எஸ்.எல்.புரம் சதானந்தனின் வாய் கூடி கல்லணை நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில்  பூஜப்புரா ரவி நடித்தார். அவரது நடிப்புக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்ததால் நடிப்பை ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்டார்.


அதன்பிறகு  தளவா திரைப்படத்தின் மூல வெள்ளித்திரையில் அறிமுகமானார். அவருக்கு ஹரிஹரன் இயக்கி 1976 ஆம் ஆண்டு வெளியான அம்மிணி அம்மாவன் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு கள்ளன் காப்பில் தானே, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்கும், முத்தாரம்குன்னு பிஓ, பூச்சக்கொரு மூக்குத்தி, மழை பெய்யுன்னு மத்தளம் கொட்டுன்னு, கடடநாடன் அம்பாடி என ஏகப்பட்ட படங்களில் பூஜப்புரா ரவி நடித்தார்.


கிட்ட 5 தசாப்தங்களாக மலையாள சினிமாவில் நடித்து பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ரவி கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான கப்பி படத்தில் நடித்திருந்தார். மம்முட்டி, மோகன்லால், சத்யன், நசீர், மது, ஜெயன், பிருத்விராஜ், டோவினோ தாமஸ் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி பல தொலைக்காட்சி  சீரியல்களில் நடித்தார்.  ரவியின் காதல் மனைவி தங்கம்மா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.


பூஜப்புரா ரவியின் மறைவுக்கு மலையாளத் திரையுலகம் மற்றும் அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என ஏராளமானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘நாடக ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து கலைத்துறையில் நுழைந்து கேரளா முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகர் பூஜப்புரா ரவி. அவரது மறைவு கலை, கலாச்சாரத் துறைக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.