விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து படை தலைவன் (Padai Thalaivan) படக்குழு வீடியோ பகிர்ந்துள்ளது.
மூன்றாவது படம் படை தலைவன்
சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மதிப்புக்குரிய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக சென்ற ஆண்டு இறுதியில் நடிகர் விஜயகாந்தின் திடீர் மறைவை அடுத்து அவரது குடும்பத்தார் உடைந்து போன நிலையில், அவரது மகன் சண்முக பாண்டியனின் படை தலைவன் படப்பிடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது.
தோற்றத்தில் அப்பாவை பிரதிபலிக்கும் மகன்
தொடர்ந்து சில வாரங்களில் படப்பிடிப்பு நடைபெறத் தொடங்கி, தற்போது இப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சண்முக பாண்டியனை வாழ்த்தும் விதமாக படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
காடு மற்றும் யானையை மையப்படுத்தி அமைந்திருக்கும் இந்தக் கதையில் அப்படியே இளம் வயது விஜயகாந்தை நினைவுபடுத்தும் வகையில், அதே ரௌத்திரம் மற்றும் உற்சாகத்துடன் சண்முக பாண்டியன் தோன்றியுள்ளார். இது விஜயகாந்த் ரசிகர்களை பெரிதும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
மேலும் தனக்கு சர்ப்ரைஸ் தந்த ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தனது நன்றியையும் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. இளையராஜாவின் இசையும் இந்த ஸ்பெஷல் வீடியோவில் பக்கபலமாக அமைந்துள்ள நிலையில், இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ்
மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் மற்றும் தன் நன்றிக்கடனைத் தெரிவிக்கும் விதமாக இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தான் நடிப்பதாக, முன்னதாக நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிவித்ததுடன் அதை செயல்படுத்தியுமுள்ளார்.
மெலும் சம்பளம் எதுவும் வாங்காமலும், அதற்கு பதிலாக நான்கு ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்யும்படியும் படக்குழுவிடம் கோரியதாகவும் இயக்குநர் அன்பு தெரிவித்திருந்தார். ராகவா லாரன்ஸ் இப்படத்தில் 5 நிமிட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Indian 2 Release Date: 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்தியன் தாத்தா! கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் எப்போது?