உத்தரப்பிரதேசம் அருகே வீட்டிற்குள் வந்த குரங்கிடம் இருந்து தப்ப, அலெக்ஸாவை நாயை போல் குரைக்க செய்து சாமர்த்தியமாக தப்பியுள்ளார் 13 வயது சிறுமி.
தொழில்நுட்பம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமயாத ஒன்றாக மாறிவிட்டது. பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் டிவி முதல் வாட்ச், செல்போன், டிக்ஸி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, கிரைண்டர் என வீடே தற்போது டெக்னாலஜி மையமாக வலம் வருகிறது. பல்வேறு வீடுகளில் எந்திருச்சு சுவிட்ஸ் போட சோம்பேறிதனமாக இருந்தால், அல்லது படுத்த இடத்தில் இருந்தே ஏதேனும் ஆன் செய்ய நினைக்கும்போது ரிமோட் இல்லை என்றால் கடுப்பாக இருக்கும். இதற்கெல்லாம் ஈஸியாக இருக்கும் வகையில் வெறும் குரல் கொடுத்தால் இயங்கும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அலெக்ஸா என்ற ஒரு குரல் கொடுத்து நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால், பாடும், குரல் கொடுக்கும். இப்படி, இந்த அலெக்ஸா எப்படி இரண்டு குழந்தைகளில் உயிரை காப்பாற்றியுள்ளது என்று இங்கே பார்ப்போம்.
இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர், தன்னையும், தன் வீட்டிலிருந்த 15 மாத குழந்தையும் குரங்கிடம் இருந்து காப்பாற்ற டெக்னாலஜியை சூப்பராக பயன்படுத்தியுள்ளார். இது தற்போது அனைவராலும் பாராட்டுதலை பெற்று வருகிறது.
என்ன நடந்தது..?
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் வசிக்கும் பங்கஜ் ஓஜா என்பவர் கடந்த வியாழன் அன்று தனது வீட்டின் மெயின் கதவை தவறுதலாக திறந்து விட்டே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய அளவிலான குரங்கு அவர்களது வீட்டிற்குள் கதவு வழியாக நுழைந்துள்ளது. பெரும் பசியில் இருந்த அந்த குரங்கு முதலில் உணவு தேடுவதற்காக முதல் தளத்தில் உள்ள சமையலறைக்கு ஏற முயற்சித்துள்ளது. அப்போது, போகும் வழியில் உள்ள தரைத்தளத்தில் இருந்த டிராயிங் ரூம்க்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் ஓஜாவின் மைத்துனி நிகிதா (13) மற்றும் அவரது 15 மாத மகள் வாமிகா ஆகியோர் சமையலறையை ஒட்டிய படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சத்தத்தை கேட்டு குரங்கு அவர்களை கண்டதும் அந்த அறையை நோக்கி வரத் தொடங்கியது. இதனை பார்த்த நிகிதா, முதலில் மிக பயந்துள்ளார். பின்னர், டக்கென்று நிகிதாவுக்கு ஒரு ஐடியா ஒன்று தோன்றியுள்ளது. அதில், அமேசானின் மெய்நிகர் உதவியாளரான அலெக்ஸாவிடம் நாயைப் போல குரைக்கும்படி கட்டளையிட்டார். அந்த அலெக்ஸாவும் நாயை போல் கடுமையாக குரைத்துள்ளது. இதனால் பயந்துபோன அந்த பெரிய குரங்கு பயந்து போய் அங்கிருந்து ஓட்டம் எடுத்துள்ளது. தொடர்ந்து, அந்த குரங்கு பக்கத்து வீட்டுக் கூரைக்கும், பின்னர் மரத்துக்கும் குதித்து மறைந்துவிட்டது. சிறுமி அந்த நேரத்தில் எடுத்த சரியான முடிவு அவரையும், அந்த 15 வயது சிறுமியையும் காப்பாற்றியுள்ளது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அந்த சிறுமி அளித்த பேட்டியில் "குரங்கு உள்ளே நுழைந்தபோது சுற்றி பெரியவர்கள் இல்லை. நான் பயந்தேன். ஆனால், என்னையும், குழந்தையையும் எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். சமையலறையில் குளிர்சாதனப்பெட்டிக்கு மேலே வைக்கப்பட்டிருந்த அலெக்ஸாவைக் கண்டு, நாயை போல் குரைக்கும்படி உத்தரவிட்டேன். இந்த யோசனை வேலை செய்யுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அது எங்கள் உயிரை காப்பாற்றியது” என தெரிவித்தார்.
குழந்தையின் அப்பாவான ஓஜா இதுகுறித்து தெரிவிக்கையில், "எனது வீட்டில் உள்ள பெரும்பாலான மின்னணு சாதனங்கள் அலெக்ஸாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதும் அலெக்ஸா என்று குரல் கொடுத்தாலும், அதை அது செய்வதும் வழக்கம். ஆனால், இப்போது அதுதான் எங்கள் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளில் உயிரை காப்பாற்றியது.” என தெரிவித்தார்.