உலகம் முழுவதுமுள்ள திரைத்துறையினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சிறந்த நடிகைக்கான விருதினை சீன நடிகை மிசெல் இயோ பெற்று ஆஸ்கர் விருது பெறும் முதல் ஆசியப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
90ஸ் கிட்ஸூக்கு பரிட்சயமானவர்
மல்ட்டி டைமென்ஷன் உலகை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘எவ்ரி திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் அதகளமான நாயகி, மகளுக்காக எதையும் செய்ய்ம் அன்பான தாய் என தன் நடிப்பால் அசத்தி சிறந்த நடிகைக்கான விருதினை தட்டித் தூக்கியுள்ளார் மிசெல் இயோ.
இந்த மிசெல் இயோ ஏற்கெனவே இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் என்றால் உங்களுக்கு நம்ப முடிகிறதா...ஆம்.. 90ஸ் கிட்ஸூக்கு நிச்சயம் இவரைத் தெரியும்.
ஜாக்கி சானுடன் ’போலிஸ் ஸ்டோரி 3’, 2000-ஆம் ஆண்டு வெளியாகி ஒன்பது ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ’பாயும் புலி பதுங்கும் நாகம்’ (ஆங்கிலத்தில் Crouching Tiger Hidden Dragon) ஆகிய படங்களில் நடித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே கவனமீர்த்து இந்தியர்களின் லைக்ஸை அள்ளியுள்ளார் மிசெல் இயோ.
60ஆவது வயதில் ஆஸ்கர்
90களில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி சர்வதேச விருதுகள் உள்பட ஏற்கெனவே பல விருதுகளை வென்றுள்ள மிசெல் இயோ, தற்போது தன் 60-வது வயதில் ஆஸ்கரை தன் கைகளில் ஏந்தும் முதல் ஆசியப் பெண்ணாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார்.
"இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சிறுவர், சிறுமிகள் அனைவருக்கும் கூறுகிறேன்... நம்பிக்கை, சாத்தியம் இவற்றின் சான்று தான் இந்த விருது. பெரிய கனவுகளைக் காணுங்கள், அந்த கனவுகள் நனவாகும் என்பதற்கு இது ஒரு சான்று.
இதை யாரும் சொல்ல அனுமதிக்காதீங்க
"மேலும் பெண்களே, உங்கள் வயது கடந்துவிட்டது என்று யாரும் சொல்ல அனுமதிக்காதீர்கள்" என தன் ஆ ஸ்கர் உரையில் மிஷெல் இயோ பேசியுள்ளார்.
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படம் மூலம் மீண்டும் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ள மிசெலுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: CWC : கவுண்டமணி செந்திலை அடிக்கவில்லையா...உங்களுக்கு சுயபுத்தி இல்லையா...விமர்சித்த ரசிகருக்கு வெங்கடேஷ் பட் பதிலடி!