குக்கு வித் கோமாளி சீசன் 4
விஜய் டிவியின் தனித்துவமான மற்றும் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சீரியசான ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் கலகலப்பான குக்கிங் ஷோவாகவும் ஒளிபரப்பாகத் தொடங்கி, மூன்று சீசன்களைக் கடந்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது விஜய் டிவியின் ’குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி.
சென்ற ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த சீசன் வழக்கம்போலவே களைக்கட்டி ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த சீசனில் நடிகைகள் ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, ஷெரின், ஷிவாங்கி, நடிகர் ராஜ் அய்யப்பா, காளையன்,கிஷோர் ராஜ்குமா, ஆண்ட்ரின் நௌரிகர் ஆகியோர் குக்குகளாக உள்ளனர்.
புகழ், சுனிதா, ஜிபி முத்து, ரவீனா, குரேஷி, தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், மோனிஷா ப்ளெஸ்ஸி, சிவா, ஓட்டேரி சிவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை கோமாளிகளுடன் கலகலப்பாக கொண்டு செல்பவர்கள் நடுவர்கள் வெங்கடேஷ் பட், செஃப் தாமு. இவர்கள் இருவருமே தங்களுடைய போட்டியாளர்கள், கோமாளிகளுடன் சகஜமாக ஜாலியாக விளையாடிக் கொண்டு, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்வார்கள்.
வெங்கடேஷ் பட் பதிவு
இந்நிலையில், வெங்கடேஷ் பட் பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கமெண்ட் அவரை கடும் கோபத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. சமீபத்தில் வெங்கடேஷ் பட் தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பேஸ்புக் பக்கத்தில், 24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் தனது கேரியரை தொடங்கியதாகவும், தற்போது தனது யூடியூப் சேனலில் ’இதயம் தொட்ட சமையல்’ நிகழ்ச்சி நன்றாக செல்வதாகவும் வெங்கடேஷ் பட் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பதிவில் ”குக்கு வித் மோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருங்கள். மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள். இதுபோன்று கோமாளிகள் மீது பொருட்களை ஏறிவதையெல்லாம் ஜாலிக்காக தான் செய்கிறேன் என்று சொன்னால் அதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தயவு செய்து இதனை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்று மலேசியாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
வெங்கடேஷ் பட் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், ”இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம். கவுன்டமணி செந்திலை அடிக்கவில்லையா? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா? அது உங்களுக்கு ஏரிச்சல் ஊட்டுகிறதா?
கொஞ்சமாவது வளருங்கள். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் விஷத்தை குடிக்க சொன்னால் குடிப்பீர்களா? உங்களுக்கு என்று சுயபுத்தி இல்லையா?” என்று வெங்கடேஷ் பட் பதிலளித்துள்ளார். இந்நிலையில் ரசிகரிடம் பொங்கித் தீர்த்துள்ள வெங்கடேஷ் பட்டின் இந்த கமெண்ட் சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.