தமிழகத்தில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். விசைப்படகுகள் மட்டுமின்றி நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோதும் அவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் தொடர்ந்து சிறைப்பிடித்து வருவதோடு, படகுகளையும் பறிமுதல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு இதுவரை சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இருநாட்டு நல்லுறவை பேணும் வகையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதித்த ஏராளமானோர் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசை இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும் சிறைப்பிடிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 16 பேரை, இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அசோக் (28), கருப்பு (22), சக்தி (20) ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர்.




மேலும் அவர்கள் நள்ளிரவில் சுமார் 12 மணி முதல் 2 மணி வரை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்தபோது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3 குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதைப்பார்த்ததும் மீனவர்கள் அச்சத்தில் தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அவர்களின் படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மீனவர்களையும் சரமாரியாக தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இதில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். இதேபோல் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மற்றொரு விசைப்படகையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். கைதான 16 பேர் மீதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்து சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில மாதங்களாக நிம்மதியாக கடலுக்கு சென்றுவந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில கைதான தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்கவும், படகுகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.