ஜென்டில்மேன்-2 படத்துக்காக கேரளாவில் இணைந்த வைரமுத்து - கீரவாணி கூட்டணி 3 பாடல்களை பதிவு செய்துள்ளன.
பிரமாண்ட தயாரிப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் மெகா தயாரிப்பாளராக வலம் வருபவர் K.T.குஞ்சுமோன். 1993ம் ஆண்டு ஷங்கர் முதன் முதலில் இயக்கிய ஜென்டில்மேன் படத்தை தயாரித்த இவர், 2020ம் ஆண்டு ஜென்டில்மேன் -2 எடுக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜென்டில்மேன்-2 படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஜென்டில்மேன்-2 படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க, கோகுள் கிருஷ்ணா இயக்குகிறார். ஒளிப்பதிவை அஜயன் வின்சென்ட்டும், ஒப்பனை கலையை தோட்டா தரணியும் மேற்கொண்டு வருகின்றனர். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். இப்படி பிரமாண்ட பிரபலங்களை வைத்து உருவாகும் ஜென்டில்மேன்-2ல் இன்னொரு பிரபலம் இணைந்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர். படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்று தந்த M.M.கீரவாணி இந்தப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். படத்தின் பாடலுக்கான இசை கோர்ப்பு பணி கடந்த 19ம் தேதி கேரளாவின் கொச்சியில் தொடங்கியது. உலகபுகழ் பெற்ற போல்காட்டி பேலசில் நடைபெற்று வரும் பாடல் பதிவு பணியில் கீரவாணியுடன், வைரமுத்து மற்றும் டி.கே. குஞ்சுமோன் இணைந்தனர். ஒருவாரமாக நடந்த இந்த பணிகளில் 3 பாடல்கள் உருவாகியுள்ளன. இது குறித்து பேசிய கீரவாணி, பாடலின் இசை கோர்ப்பு நிகழ்வில் பங்கேற்ற ஒரு வாரம் தனது வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என்றும், இறுதி நாளில் போல்காட்டி பேலஸ் நிர்வாகம் சார்பில் படக்குழுவுக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய விருந்து உபசரிப்பு மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்றும் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வைரமுத்து, கீரவாணி போற ஜாம்பவானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றிவது தனக்கு கிடைத்த பெருமை என்றும், படத்தின் பாடல் பதிவுகள் மனதுக்கு நிறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது மூன்று பாடல்களின் கம்போஸிங் முடிந்த நிலையில், மற்ற பாடல்களின் கம்போசிங் விரைவில் நடைபெற உள்ளது. படத்தின் துவக்க விழா, நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். ஜென்டில்மேன் -2 தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க: Thangalaan Budget: ரத்தமும் சதையுமாக இருக்கும் விக்ரம் நடிக்கும் தங்கலான்: படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
Kamal Hassan: கிறிஸ்டோஃபர் நோலனை கமல்ஹாசன் சந்தித்த அந்த ஒரு தருணம்! - பேசியது என்ன தெரியுமா?
Kanguva: கதையில இவ்வளவு பெரிய ட்விஸ்ட்டா? அப்போ இன்னொரு சூர்யா லுக் எப்படி இருக்கும்?