பட்டியல் வகுப்பினர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் நேற்று கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் பேசியது தொடர்பாக, சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான வன்னிஅரசு புகார் அளித்தார்.இந்தப் புகாரை அடுத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவைகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால், மீரா மிதுனை சென்னை அழைத்து வர தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் வாக்குமூலம் கொடுக்காமல் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தார். தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து அடம்பிடித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவருடன் சக போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டிக்கும் மீராமிதுனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி கடுமையாக மோதி வந்தனர். குழாயடி சண்டை போல இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் இருந்து வந்தது. போட்டி நிறைவுக்கு பிறகும் அவர்களுக்கு இடையேயான சண்டை ஓய்ந்தபாடில்லை. ட்விட்டர் மூலமும் இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான், மீரா மிதுன் கைது குறித்து சனம் ஷெட்டி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், ‛சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு போலீசார் மற்றும் சைபர் க்ரைம் போலீசாரை நினைத்து பெருமைப்படுகிறேன். சில ஆண்டுகளாக சந்தித்து கொண்டிருந்த அத்தனை கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது,’ என்று குறிப்பிட்டுள்ளார். மீரா மிதுன் கைது குறித்து சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள பதிவை, மீராமிதுன் ஆதரவாளர்கள் கண்டித்து வந்தாலும், அவருக்கு எதிரான தரப்பு கொண்டாடி வருகிறது.