Meera Chopra Marriage: எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நிலா எனும் மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா சோப்ரா. தமிழ் சினிமாவில் நிலா எனும் பெயரில் அறிமுகமான இவர், முதல் படத்தில் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டார். அடுத்ததாக ஜாம்பவான், லீ, அர்ஜூன் நடித்த மருதமலை, சிம்பு நடித்த காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

 

இவர் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினராவார். தற்போது இந்தியில் திருநங்கையின் கதையை மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சாஃபத் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. 

 

இந்நிலையில் மீரா சோப்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் மீரா சோப்ரா தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் பார்த்து கொள்கின்றனர் என்றும், ராஜஸ்தானில் நடக்க இருக்கும் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 150 பேர் பங்கேற்க உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

எனினும், மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. திருமணத்திற்கு பிறகு மும்பையில் இருக்கும் தொழிலதிபர் மற்றும் நண்பர்களுக்கு மீரா சோப்ரா வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.