ஒடிசாவில் அமைந்துள்ளது கஞ்சம் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரபட்டா ஜோஷி. இவருக்கு தற்போது 54 வயதாகிறது. இவர் கடந்த 1993ம் ஆண்டு சென்னை வந்திருந்தார். அப்போது, அவர் கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் இந்திரா என்ற பெண் பணியாற்றியுள்ளார்.


மாமியார் குத்திக்கொலை:


அவருக்கும், ஜோஷிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஜோஷிக்கும் இந்திராவிற்கும் இடையே 1994ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்திராவிற்கும் அவரது கணவர் ஜோஷிக்கும் இடையே திருமணமான சில மாதங்களிலே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திரா ஜோஷிக்கு எதிராக விவாகரத்து கேட்டுள்ளார். இதற்கு இந்திராவின் சகோதரர் கார்த்திக், தாய் ரமாவும் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.


இந்த சூழலில், 1995ம் ஆண்டு குடும்பத்தகராறு முற்றியதில் ஜோஷி தனது மனைவி இந்திரா, அவரது சகோதரர் கார்த்திக் மற்றும் தனது மாமியார் ரமா ஆகியோரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஜோஷி அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.


28 ஆண்டுகள் தலைமறைவு:


கத்திக்குத்துக்கு ஆளான இந்திரா, கார்த்திக் உயிர் பிழைத்த நிலையில் ரமா பரிதாபமாக உ.யிரிழந்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஷியை தேடி வந்தனர். அவர் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்த நிலையில், அவரது சொந்த ஊரான ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்திற்கு 1996ம் ஆண்டு போலீசார் விசாரணைக்காக சென்றனர் அப்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவரை பிடிக்க முடியவில்லை.


கடந்த 2006ம் ஆண்டு வரை ஜோஷியை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவரை கைது செய்ய முடியாமல் தமிழ்நாடு போலீசார் தடுமாறியுள்ளனர். இந்த நிலையில், அவரை கைது செய்வதற்காக ஆதம்பாக்கம் எஸ்.ஐ. கண்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதற்காக, ஜோஷி 22 வயதில் எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு போலீசார் ஒடிசா சென்றனர்.


சிக்கிய கொலையாளி:


ஒடிசாவில் முகாமிட்ட தமிழ்நாடு போலீசார் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஜோஷியின் சொந்த ஊரான பேர்ஹாம்புர் உள்பட பல இடங்களில் வலைவீசி தேடியுள்ளனர். கடைசியாக உள்ளூர் போலீசார் உதவியுடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலைக்குற்றவாளியான ஜோஷியை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோஷியை சென்னை கொண்டு வருவதற்கு முன்பாக பேர்ஹாம்புர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


சென்னையில் மாமியாரை கொலை செய்து விட்டு 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மருமகனை ஒடிசாவடில் தமிழ்நாடு போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷியை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.