மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என தான் நினைக்கவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


எங்கு திரும்பினாலும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் பற்றிய பேச்சுதான் சினிமா ரசிகர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளுக்கு இளைஞர் பட்டாளம் தொடர்ச்சியாக இந்த படம் பார்க்க படையெடுத்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியான இந்த சினிமா தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹவுஸ்புல் காட்சிகளால் தியேட்டர்களில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. 


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய் மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தில் கமல்ஹாசனின் குணா படமும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் மிகச்சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


மஞ்சுமெல் பாய்ஸ் படம்  நான்கு நாட்களில் ரூ.14.75 கோடி வசூல் செய்துள்ளது.  இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்ற நிலையில் படம் வசூலை அள்ளியது. இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 






இந்நிகழ்வுக்கு பின்னர் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குநர் சிதம்பரம், “கமல்ஹாசனை பார்த்தது என்னால் நம்ப முடியவில்லை. இதுதான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் உண்மையான கிளைமேக்ஸ் காட்சி. கமல்ஹாசன் இல்லாமல், குணா படம் இல்லாமல் மஞ்சுமெல் பாய்ஸ் படம் இல்ல. இதுதான் எனக்கு உண்மையான வெற்றி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் ஊரை விட இங்கு தான் நல்ல சப்போர்ட் உள்ளது.


படம் பற்றி கமல் சார் நிறைய பேசினார். படம் மிகவும் நன்றாக இருப்பதாக சொன்னார். பிடித்திருப்பதாக சொன்னதே பெரிய விஷயம். குணா படம் ஷூட் பண்ணது பற்றி நிறைய கேட்டேன். நான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை. ஆனால் கண்மணி அன்போடு காதலன் பாடல் தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் படத்தில் மீண்டும் பயன்படுத்தினேன். ஆனால் அந்த அளவுக்கு ரீச் கிடைக்கும் என நினைக்கவில்லை” என தெரிவித்தார். 




மேலும் படிக்க: Manjummel Boys: குணா குகையில் வெற்றிக்கொடி நாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்.. நேரில் அழைத்து பாராட்டிய கமல்!