சென்னை குன்றத்தூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஓட ஓட விரட்டி விரட்டிய மர்மகும்பல்
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை அடுத்த குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் மனோகரன. இவரது மகன் நிஷாந்த் (23), லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள பகுதியில் அமர்ந்து செல்போனில் விளையாடி கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் நிஷாந்த்தை சரமாரியாக வெட்டினார்கள்.
தப்பி சென்ற மர்மகும்பல்
இதனை கண்டதும் அங்கிருந்து நிஷாந்த் தப்பி ஓடிய நிலையில் விரட்டி சென்ற மர்ம கும்பல் ஓட, ஓட விரட்டி நிசாந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் நிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நிஷாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
இதனை எடுத்து குன்றத்தூர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவருன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அஜித் தரப்பினர் தற்போது நிஷாந்தை வெட்டி கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மேலும் கொலைக்கான காரணம் வேறு ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் தொடரும் கொலை
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய தாம்பரம், குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ரவுடிகளுக்கு இடையே நடைபெறும் அதிகார மோதலில், கொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பெரிய ரவுடிகளை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், குட்டி ரவுடிகளையும் வளரவிடாமல் ஆரம்பத்திலேயே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.