மும்பையின் தாராவியைச் சேர்ந்த மலீஷா கர்வா என்ற 15 வயது சிறுமி, ஆடம்பர தோல் பராமரிப்பு பிராண்டான ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸின் அடையாளமாக மாறியுள்ளார். ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதம் இவரை அவர்களின் புதிய மாடலாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
கர்வாவின் இந்த பிரபல்யத்திற்கு பின்னால், அந்த நிறுவனத்தின் பெரிய நோக்கம் ஒன்று உள்ளது. ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸ் பிராண்ட் பின்தங்கிய குழந்தைகளை கல்வியின் மூலம் மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறது, மேலும் அவர்களின் கனவுகளை யதார்த்தமாக மாற்ற உதவுகிறது. அதன் ஒரு படியாகவே இந்த பெண்ணை அவர்களது மாடலாக நியமித்துள்ளனர்.
கர்வா தந்த பேட்டி
அவர்களின் புதிய விளம்பரத்தின் மாடலாக இந்த பெண்ணை அறிமுகப்படுத்திய பின், அந்த பிராண்ட் அவரை நேர்காணல் செய்தது. அதில் அவர் 13 கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிரியங்கா சோப்ராதான் தனது ரோல் மாடல் என்று கர்வா தெரிவித்தார். மேலும் நோரா ஃபதேஹியின் நடனத் திறமையை கண்டு வியப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவரும் அவரது நடன திறமைகளை காட்டியதுடன், அவருக்கு பிடித்த பாடலையும் பாடினார்.
இரண்டு ஹாலிவுட் படங்களில் கமிட்
ஏற்கனவே இரண்டு ஹாலிவுட் பட வாய்ப்புகளைப் பெற்றுள்ள மலீஷா, அர்சலா குரேஷி மற்றும் ஜாஸ் சாகு ஆகியோரின் "லைவ் யுவர் ஃபேரிடேல்" என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். யூடியூப்பில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம், புதுமுகங்களை வைத்து இயக்கப்பட்டது. மேலும் அந்த குறும்படம் ஐந்து குடிசைச் சிறுவர்களின் கதையை சொல்கிறது. ஒரு சூப்பர் மாடலாக ஆசைப்படும் கர்வா, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளார். அவருக்கு இப்போதே 2.3 லட்சம் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் தினமும் தனது வாழ்க்கையின் துணுக்குகளை அவரது பக்கத்தில் தவறாமல் பகிர்ந்து கொள்கிறார். அதோடு அவர் பதிவிடும் பதிவுகளில் பிரத்யேக ஹாஷ்டாக் ஆன #theprincessfromtheslum என்ற ஹேஷ்டேக்கை அடிக்கடி பயன்படுத்துகிறார்.
வைரல் ஆன வீடியோ
சமீபத்தில், ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கர்வா தனது விளம்பர புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட ஒரு கடைக்குச் சென்று பார்கும் நெகிழ்வான காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கே அவரது ரியாக்ஷன்கள் அவரது ஆசை கனவு என அத்தனையும் கூறுகின்றன.
இந்த வைரலான வீடியோவை வெளியிட்ட ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ், "அவருடைய முகம் தூய்மையான மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கிறது. கண்முன்னே அவள் கனவுகளைப் பார்க்கிறார். கனவுகள் உண்மையில் நனவாகும் என்பதற்கு மலீஷாவின் கதை ஒரு அழகான உதாரணம்," என்று எழுதியிருந்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 5.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.