UPSC Civil Services Exam Result: 2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சியால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
தேர்வு முறை எப்படி?
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று
வெளியாகின.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (23.05.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடைபெற்றது. இந்த நிலையில் யூபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அதில் ஈஷிதா கிஷோர் என்பவர் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.
தேர்வர்கள் https://www.upsc.gov.in/FR-CSM-22-engl-230523.pdf என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.
ஐஏஎஸ் அதிகாரியின் மகன் தேர்ச்சி
சென்னை மாநகராட்சி ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதுகலை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் 2022ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி, வெற்றியும் பெற்றுள்ளார். இவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையும் வாசிக்கலாம்: UPSC Result 2022 TN List: யூபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்ச்சி; வெளியான முழு பட்டியல் இதோ!