கேஜிஎஃப் படத்தில் நடித்தவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான மாளவிகா அவினாஷ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தன் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார்.


கே.ஜி.எஃப். நடிகை:


கேஜிஎஃப் படத்தில் பத்திரிகையாளராக நடித்து பான் இந்தியா ஆடியன்ஸின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மாளவிகா அவினாஷ். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை,  பத்திரிகையாளர், பரதநாட்டியக் கலைஞர் என பன்முகக் கலைஞராக கன்னட திரையுலகில் வலம் வருகிறார் மாளவிகா அவினாஷ்.


தமிழில் முதலில் சீரியல் உலகில் கால் பதித்த மாளவிகா, கே. பாலச்சந்தர் கதை எழுதி சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘அண்ணி’ தொடரில் பெரும் பிரபலமானார்.  அதேபோல் சன் டிவியில் அவர் நடித்த ’ராஜ ராஜேஸ்வரி’ தொடர் மூலம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகையாக உருவெடுத்தார்.


பா.ஜ.க. நிர்வாகி:


அதனைத் தொடர்ந்து தமிழில் சரண் இயக்கிய ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினுக்கு தோழியாக அறிமுகமான மாளவிகா, தொடர்ந்து ஆறு, டிஷ்யூம், ஆதி, ஜெயம் கொண்டான், இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மேலும் சீரியல் உலகிலும் தொடர்ந்து கோலோச்சி வந்த மாளவிகா,  தமிழில் இறுதியாக 2011ஆம் ஆண்டு ’வந்தான் வென்றான்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறார். 


வீங்கிய முகம்:


இந்நிலையில், கடுமையான மைக்ரைன் தலைவலி காரணமான முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாளவிகா, இதுகுறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.


அதில் ”ஒற்றைத் தலைவலி பிரச்னை இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், இல்லையென்றால் நீங்களும் என்னைப் போல் மருத்துவமனையில் சேர்ந்து விடுவீர்கள்” எனக் கவலையுடன் தெரிவித்திருந்தார்.




உடல்நலக் குறைவால் மாளவிகாவின் முகம் இந்தப் புகைப்படத்தில் வீங்கிய நிலையிலும், ஆள் அடையாளம் தெரியாத நிலையிலும் இருந்த நிலையில், இந்தப் புகைப்படம் இணையத்தில் கடும் ட்ரோல்களை சந்தித்தது.


ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி:


இந்நிலையில், தன்னை ட்ரோல் செய்தவர்களை சரமாரியாக சாடி மாளவிகா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். ”நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி. மேலும், என்னை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கூட ட்ரோல் செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அரசியல் கழுகுகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


 



மாளவிகா தொடர்ந்து அரசியல் கருத்துகளை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Madhavan - Sudha kongara: நட்புக்கு இல்லையே எல்லை.. 20 ஆண்டுகள் தோஸ்த்டா..! மாதவனுடன் லஞ்ச் சாப்பிடும் சுதா கொங்கரா..!