தஞ்சாவூர்: தஞ்சை திலகர் திடல் அருகே தொப்புள் பிள்ளையார் கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் இந்து அமைப்பினர் கோவில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தஞ்சை திலகர் திடல் அருகே தொப்புள் பிள்ளையார் கோவில், சியாமளாதேவி அம்மன் கோவில் ஆகிய 2 கோவில்கள் அருகருகே உள்ளன. இந்த கோவில் அருகே சாலை விரிவாக்க பணிக்காக மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. அப்போது கோவிலின் சுற்றுச்சுவர் பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.
இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் அங்கு வந்து கோவில் பட்டா இடத்தில் தான் உள்ளது. மாநகராட்சி இடத்தில் இல்லை என கூறினர். அப்போது சாலை விரிவாக்க பணிக்காக கோவில் சுற்றுச்சுவர் மட்டும் தான் இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவிலை இடிக்கப்போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் இந்த அமைப்பினர், வணிகர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் இந்த கோவில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதனை இடிக்க கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டு பொக்லின் எந்திரம் அங்கிருந்த எடுத்துச்செல்லப்பட்டது.

மேலும் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசாரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் கோவில் இடிக்கப்படவில்லை என தெரிவித்தனர். மேலும் கட்டிடத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் இறங்கி வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களும் இறங்கின். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.





தஞ்சாவூர் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இந்த நகரம் காவிரி டெல்டாவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான விவசாய மையமாகும், மேலும் இது “தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் நகராட்சி‌ தமிழக அரசால் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி சேலஞ்ச் போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆனது இரண்டாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர், தஞ்சாவூர் நகரத்தின் அடிப்படை மேம்பாட்டிற்கான தற்போதைய முன்மாதிரி வடிவமைப்பு முன்மொழிக்கப்பட்டது.

இதில் தற்போது இருக்கும் நகரத்தின் அடையாளம் மற்றும் கட்டுமானங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வலுவான கட்டுமானங்கள் உடன் நிறைய பணிகள் மேற்கொள்ளப்படும் ‌என‌ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டிக்கு சுற்றுலா, பசுமைவெளி, பொருளாதார மேம்பாடு, நகர்ப்புற போக்குவரத்து, நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் சாலைகள்/மோட்டார் அல்லாத போக்குவரத்து(என்எம்டி) போன்ற பல்வேறு துறைகளில் இருந்து திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பத்து ஸ்மார்ட் சாலைகள், பழைய பேருந்து நிலையத்தை சீரமைத்து திருவையாறு பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் மேம்பாடு, திருவள்ளுவர் திரையரங்கம் வணிக வளாகமாக மாற்றம் என்று பல்வேறு பணிகள் நடந்துள்ளன. நடந்தும் வருகிறது. அந்தவகையில் சாலை விரிவாக்கத்திற்காக தொப்புள் பிள்ளையார் கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இதை பொதுமக்கள் கண்டித்து திரண்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.