Maamannan Vadivelu: ஒட்டுமொத்த திரையுலமே எதிர்பார்த்து காத்திருந்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யாருமே எதிர்பார்க்காத மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நமக்கெல்லாம் நகைச்சுவை மன்னாக மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கும் வடிவேலு மாமன்னன் படத்தில் முற்றிலும் வேறு பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது மட்டும் இல்லாமல், அந்த பாத்திரத்திற்கு நான் சிறந்த பொறுத்தம் என காட்டியிருக்கிறார் வைகைப்புயல். 


பெரும்பாலும் வடிவேலுவின், ஏமாற்றம், தவிப்பு, கோபம், அழுகை என நடிப்பின் அடையாளமாய் கூறப்படும் நவரசத்தையும் பார்த்து பார்த்து சிரித்து பழகிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதல் முறையாக வடிவேலுவின் ஏமாற்றத்தையும் அழுகையும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் தான் சார்ந்த சமூகத்தைச் சார்ந்த சிறுவர்கள்  கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட பின்னர், தான் தொண்டனாக உள்ள கட்சி நமக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என நினைத்து முறையிடும் போது, கட்சியின் அடிப்படைக் கொள்கைகளைக் கூட உள்வாங்கிக்கொள்ளாத, நிர்வாகிகள் எங்கள் சாதியை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதை சொல்லாமல் சொல்லும் போது, தனது கையறு நிலையை எண்ணி, வெதும்பி சத்தமாகக்கூட அழமுடியாமல் தவித்து அதன் பின்னர் வெடித்து அழும் வடுவேலுவைப் பார்த்து திரையரங்கம் நிசப்தமாகத்தான் இருந்தது. 




வடிவேலுவின் முதிர்ச்சியான நடிப்பு


எல்லா நகைச்சுவை நடிகரும் தலைசிறந்த குணச்சித்திர நடிகர் என கூறுவர், அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டியுள்ளார் வடிவேலு. தனது காதாப்பாத்திரம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் கதாப்பாத்திரம் என்பதை உணர்ந்து,  அரசியல் களத்திலும் சமூக களத்திலும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் நடத்தப்படுவதை சகிப்புத் தன்மையுடன் எதிர்கொள்ளும் காட்சியிலும் சரி, தான் பின்பற்றும் சித்தாந்தம் சார்ந்த கட்சி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும், அதே கட்சியில் உள்ள பொருப்பாளர்கள் சித்தாந்தத்தை உணராமல், ஆதிக்க சாதி மனநிலையில் நடந்துகொள்ளும் முறையை எதிர்கொள்ளும் போதும், வடிவேலுவின் நடிப்பின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. 




சமகால அரசியல்


ஒரு சாதாரண தொண்டன் நெடுங்காலம் ஒரு கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக உயரும் காலம் என்பது ஒரு தலைமுறை இடைவெளியாக படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த கால இடைவெளியில் சமூகநீதியை சித்தாந்தமாகக் கொண்ட கட்சி தனது சித்தாந்தத்தை கட்சிப் பொருப்பாளர்களிடம் கூட கொண்டு சேர்ப்பதில் தவறி விட்டது என்பதையும், கட்சியின் முக்கிய தலைவரின் வாரிசு என்பதாலே சித்தாந்தத்தை உள்வாங்காதவரிடம் பொறுப்பு வழங்கப்படுகிறது என்ற ஓட்டு அரசியல் களத்தை மிகத் தெளிவான திரைக்கதையாலும், வசனத்தாலும் காட்சிப்படுத்திருக்கிற மாரிக்கு, தனது நடிப்பின் மூலம் தூணாக நின்றுள்ளார் மாமன்னன் வடிவேலு. படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப வடிவேலு இடையிடையே பாடும் பாடல்கள் திரையில் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் விருந்து. சாதாரண தொண்டன் தொடங்கி சபாநாயகர் வரை நடிப்பின் மாமன்னன் வடிவேலு. 




மேலும் படிக்க, Maamannan: 'பொதுத்தொகுதி அனைவருக்கும் பொது இல்லை' மாமன்னன் உணர்த்தும் மாபெரும் உண்மை..!


மேலும் படிக்க, Mari Selvaraj Movies: நாளை ரிலீசாகும் மாமன்னன்.. மாரி செல்வராஜ் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?