தமிழ் திரையுலகை கடந்து தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ள விஷயமாக வடிவேலு, உதயநிதி, ஃபகத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம். ஒரு பக்கம் இது அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்த தனபாலின் உண்மைக் கதை என கூறியதற்கு தனபாலும் அதனை ஒப்புக்கொண்டது போல் பதில் அளித்துள்ளார்.
கொங்கு மண்டலம்
ஆனால், இவற்றையெல்லம் கடந்து மாரி செல்வராஜ் போன்ற சமூக பொறுப்பு மிக்க இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான, கொங்கு மண்டலத்தை படமாக்கியது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. தனது முதல் இரண்டு படங்களில் பிறந்து வளர்ந்த தென் தமிழநாட்டின் சிறிய அசைவையும் அழகாக படமாக்கிய மாரி, கொங்கு மண்டலம் குறித்த கதையில் கொஞ்சம் கோட்டைவிட்டு விட்டார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
தென் தமிழ்நாட்டின் சாதிய ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்ட மாரி செல்வராஜ், தனக்கு சவாலான கொங்கு மண்டலம் குறித்து படம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. சமூகத்தில் சாதி இரண்டு லேயராக செயல்படும் என்பதை இப்படம் காட்ட முயற்சித்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களுக்கு ”ஓட்டும் அவர்களுக்கு தனித் தொகுதியும்” இருப்பதால் தான் ஆதிக்க சாதி மனநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுடன் உறவு பேணுகிறார்களே தவிர, அனைவரும் சமம் எனும் தத்துவ அடிப்படையில் ஒருநாளும் அம்மக்களை அணுகியதில்லை. இதை மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்ட பின்னர், நியாயத்திற்காக ஆதிக்க சாதி மனநிலையில் உள்ள, தான் சார்ந்த கட்சியினரிடம் முறையிடும் வடிவேலு காட்சி தொடங்கி, படத்தின் இறுதிக் காட்சி வரை விளக்கியிருக்கிறார் மாரி.
பொதுத் தொகுதி எப்போதும் பொது இல்லை
அரசியல் கட்சியில் மாவட்ட அளவில் பலம் வாய்ந்த பொறுப்பு என்றால் அது மாவட்டச் செயலாளர். மாவட்டச் செயலாளர் ரத்னவேலு வேறு கட்சிக்கு மாறும் போது, சேலம் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக மாமன்னன் நியமிக்கப்பட்டிருக்கலாம், படத்தின் கதையை சுவாரஸ்யப்படுத்துவதற்கு கூட அப்படியான காட்சி வைக்கப்படவில்லை. ஏற்கனவே இப்படம் கொஞ்சம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என இயக்குநர் கூறியிருந்தது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
மேலும், கட்சிக்கும் கட்சியின் கொள்கைக்கும் மிகவும் நேர்மையாக உள்ளவரை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக தனித்தொகுதியில் மட்டும் போட்டியிடவைக்கும் திராவிடக் கட்சிகளின் அரசியலை மிக நேர்த்தியாக விளக்கியிருக்கிறார்கள். தனித்தொகுதி தலித்துகளுக்கானது என்றாலும், பொதுத்தொகுதி அனைவருக்கும் பொது இல்லை என தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றின் பொட்டில் அறைந்திருக்கிறது இந்த மாமன்னன்.
அரியலூர், தாமிரபரணி ஆறு சம்பவம்:
மாமன்னன் குடும்பத்தை கொலை செய்ய வரும் ஆதிக்க சாதி கும்பல் தடுக்கப்படும்போது, தனது வன்மத்தை எப்படியாவது வெளிப்படுத்தவேண்டும் என அதிவீரன் வளர்க்கும் பன்றிகளை நாய்களை விட்டு கொல்வது, தர்மபுரி இளவரசன் திவ்யா சம்பவம் போல் சாதியத்தின் பல நிகழ்வுகளை நியாபகப்படுத்துகிறது. அதேபோல், கல் வீசியே கிணற்று நீரில் மூழ்கடித்து சிறுவர்கள் கொல்லப்படும் காட்சி ஆதிக்க சாதி சிந்தனையில் அரியலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை கிணற்றில் பாய்ச்சி சிறுவர்கள் கொல்லப்பட்டதைம், தாமிரபரணி ஆற்று நீரில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காவல் துறை கல் வீசியும், லத்தியால் அடித்தும், கொலைசெய்த நிகழ்வினையும் நெஞ்சில் நிறுத்துகிறது.
அம்பேத்கரின் பார்வை:
டாக்டர் அம்பேத்கர் தலித்துகளை socially handicapped எனும் வார்த்தையை பயன்படுத்தியிருப்பார், அதாவது இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் என கூறியிருப்பார். அந்த வார்த்தையை மிகவும் சரியாக விளக்கும் படமாக இந்த படத்தினை காட்சிப் படுத்த முயற்சித்திருக்கிறார்.
மேலும், சக மனிதனையே அந்நியமாக பார்க்கும் சமூகத்தின் பொதுப்புத்தியில் பன்றியின் மீதான பார்வை என்பது, அய்ய..ச்சீ.. என்ற உடன் வசனத்துடன்தான் சிந்தனையே துவங்கும். பன்றி என்றாலே, அறுவருப்பான விலங்கு என விலகி நிற்பதால் பன்றிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பது போல படம் முழுவதும் பன்றிகளை மிகவும் அழகியலாக காட்சி படுத்தியிருப்பது அருமை. மேலும் பன்றி அரவருக்கத்தக்க உயிரினம் இல்லை என்றும், பன்றிக் கொட்டகையில் காதல் வளர்க்கலாம் என காட்சிபடுத்தியிருப்பது தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தப்படாத காதல். ரகுமான் நீண்ட நாட்களுக்குப் பிறகாக ஒரு உயிரோட்டமான இசையை வாரி வழங்கியுள்ளார்.