18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகள் உள்ளிட்ட 102 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை விறுவிறுப்பாக ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மதியம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார், அவரது மனைவி லக்ஷ்மி ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர். தொடர்ந்து தன் வாக்கை செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய சூர்யா, “ஒவ்வொருவரும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும், ஒவ்வொருவரும் தங்கள் வேட்பாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்" எனப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, “அனைவரும் வந்து ஓட்டு போட வேண்டும். நாம் இந்த நாளை பொது விடுமுறை நாளாக எண்ணக்கூடாது. உங்கள் தொகுதி பற்றி தெரிந்து கொண்டு வந்து ஓட்டு போடுங்கள்” என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னதாக சைக்கிளில் வந்து தனது வாக்கினை செலுத்திய நடிகர் விஷால், “இன்று எலெக்ஷன் நாள். சரியான வேட்பாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் கிடைத்ததில் இருந்து, என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். ஒரு தேர்தலைக் கூட தவறவிடாமல் வாக்களித்துள்ளேன் என்று நான் பெருமைப்படுகிறேன். நீங்கள்
அனைவரும் சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒரு வாக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். எனவே, இம்முறை வாக்கு சதவீதத்தை அதிகபட்சமாக எட்டிவிடுவோம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என ட்வீட் செய்துள்ளார்.
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் மட்டும் 57.86 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் படிக்க: Sivaji Krishnamoorthy - Vijay: “விஜய் நல்லது செஞ்சா, நானே மேடை போட்டு சொல்லுவேன்” - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உறுதி!
Sivakarthikeyan: "புல்லட்டை விட வலிமையானது பேலட்” - வாக்களிக்க வருமாறு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!