தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பெரிய திருமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.


 




 


தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும் ,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


 




 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி, இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும், வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் தனக்கு மகத்தான வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்” எனக் கூறினார்.