ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட வராத நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் துவங்கியது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1732 வாக்கு சாவடிகள் பிரத்தியேகமாக வாக்குப்பதிவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவுகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு சரியாக துவங்கியது அதற்கு முன்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரத்தினை சீல் வைத்தனர். 


இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் ஊராட்சியில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.


இந்நிலையில் ஏகனாபுரம் கிராம ஊராட்சியில் இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதற்குரிய அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் மொத்தம் ஆண், பெண் என 1375 வாக்காளர்கள் உள்ளனர். 


ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்களும் ஒரு நோட்டா என மொத்தம் 32 வேட்பாளர்களாக உள்ளனர். 


இந்நிலையில் காலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாதிரி வாக்குகள் வாக்குச்சாவடி அலுவலர்களால் பதியப்பட்டது.


இந்த வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாக்குச்சாவடி மையத்தில் நான்கு சிஆர்பி காவல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுபவரும் ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.


ஏகனாம்புரம் கிராமத்தில் 9 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 வாக்குகளையும் அரசு அலுவலர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர் ‌. நாகப்பட்டு கிராமத்தில் இதுவரை ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை.


பரந்தூர் விமான நிலையம் வர உள்ளதால் ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் வாக்களிக்க வருமாறு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வீடு வீடாக சென்று வாக்காளர்களை அழைத்துள்ளார். அவரிடம் வாக்குவாதத்தில்  ஏகனாபுரம் ஊர்மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.