நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக திமுக நட்சத்திர மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். அவரின் இந்த அரசியல் வருகை நீண்ட காலமாக எதிர்பார்த்தது தான் என்றாலும், திடீரென கட்சி பெயரை அறிவித்தது திரையுலகினர், அரசியல் கட்சியினர் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என விஜய் தெளிவாக சொல்லியிருக்கிறார். 


தற்போது 68வது படத்தில் நடித்து வரும் தான், இன்னும் ஒரு படம் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் மெதுவாக தான் தன்னுடைய கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவரின் அரசியல் வருகையை பலர் வரவேற்றும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திமுகவின் நட்சத்திர மேடை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விஜய்யின் அரசியல் பற்றி தனது கருத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 






அதில், “விஜய் ஒரு கட்சி ஆரம்பித்து 2024 தேர்தலில் நிற்க மாட்டேன். 2026 சட்டமன்ற தேர்தலில் நிற்கணும், ஜெயிக்கணும், முதலமைச்சர் ஆகணும் என சொல்கிறார். ஆனால் தேர்தலை பற்றி யோசிக்காமல் ஆரம்பித்த கட்சி என்றால் அது திமுக தான். விஜய்யின் அரசியல் வருகை சரி, தப்பு என சொல்வதை காட்டிலும் மற்றவர்கள் எல்லாம் ஓய்வு வயதான 60 வயசு வரும்போது சினிமாவில் இருந்து விலகி அடுத்த வேலையாக அரசியலுக்கு வருவார்கள்.


இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வருவார்கள். விஜய்க்கு 49 வயது தான் ஆகிறது. நல்ல முன்னணி நடிகராக உள்ளார். அரசியலுக்கு வருகிறார், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லா பண்ணுங்க. நீங்க நல்லது பண்ணிங்கன்னா நானே மேடை போட்டு பேசப்போறேன். நல்லது செஞ்சா நல்லதுன்னு சொல்லப்போறோம். விஜய் வர்றதால இந்த நாட்டுக்கு கொஞ்சம் நல்லது நடந்தா நன்மை தானே?”  என அந்த நேர்காணலில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.