முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் வெளியாகும் ஒரு படத்தின் வெற்றி என்பது அது எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடியது என்பதை வைத்து கணக்கிடப்படும். ஆனால் இன்றைய நிலவரப்படி வெளியான எத்தனை நாட்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பதை பொறுத்தே ஒரு படத்தின் வெற்றி என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.


அந்த வகையில் 2024ம் ஆண்டின் இந்த ஆறு மாத காலத்தில் கோலிவுட்டில் கிட்டத்தட்ட 150 படங்கள் வெளியாகி இருந்தாலும் அதில் 100 கோடி வசூலை எட்டிய படங்களை பற்றி பார்க்கலாம். 


100 crore movies : இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?


மகாராஜா : 


நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ்,  சிங்கம் புலி, அபிராமி, நட்டி, பாரதிராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மகாராஜா'. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் முதல் நாளிலேயே வசூலால் சாதனை படைத்தது.


இது விஜய் சேதுபதியின் 50-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான 17 நாளில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2024ல் வெளியான படங்களிலேயே அதிவேகமாக 100 கோடியை எட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம். 



அரண்மனை 4:


சுந்தர்.சி இயக்கி நடிக்க அவருடன் தமன்னா, கோவை சரளா, ராஷி கண்ணா, டெல்லி கணேஷ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுந்தர். சியின் வழக்கமான மசாலா கலந்த கலாட்டா கலந்த ஹாரர் திரைப்படம் தான். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த மே 3ம் தேதி அன்று வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆண்டு முதல் 100 கோடி வசூலை ஈட்டிய படம் என கொண்டாடப்பட்டது. 


2024ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலிவுட்டில் வெளியான கேப்டன் மில்லர், அயலான், ரத்னம் என மிக பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் கூட பெரிய அளவில் பாக்ஸ் ஆபிசில் வசூலிக்கவில்லை. அதுவே மலையாள திரையுலகில் 2024ம் ஆண்டு வெளியான பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேஷம் என தொடர்ச்சியாக ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து திக்குமுக்காட வைத்தது. 


இருப்பினும் தமிழ் சினிமாவில் இனி வரும் ஆறு மாதங்களில் தொடர்ச்சியாக டாப் நடிகர்களில் படங்கள் வெளியாக உள்ளன. கமல்ஹாசனின் இந்தியன் 2 , தனுஷின் ராயன், ரஜினிகாந்தின் வேட்டையன், விஜயின் தி கோட், விக்ரமின் தங்கலான் என மிக முக்கியமான படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. 


2024ம் ஆண்டு முதல் பாதியில் கோட்டைவிட்ட வசூலை ஆண்டின் பிற்பகுதியில் ஒட்டுமொத்தமாக குவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.