இந்தியன் 2
கமல் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 (Indian 2) படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஷங்கர் என்றாலே அனைவருக்கு முதலில் நினைவுக்கு வரும் வார்த்தை பிரமாண்டம் தான். படங்கள் மட்டுமில்லை, ஷங்கர் படங்களில் வரும் பாடல்களில் இருக்கும் பிரமாண்டத்தைப் பற்றியே அவ்வளவு பேசலாம். அந்த வகையில் சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் வெளியாகியுள்ள காலண்டர் பாடல் காட்சிகளும் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளன.
காலண்டர் பாடல்
இந்தியன் 2 படத்தின் காலண்டர் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்கள். 2017ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற தென் அமெரிக்க மாடல் டெமி லீ டெபோ ( Demi-Leigh Tebow) இந்தப் பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் பாடலின் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பலர் இந்தப் பாடலில் வரும் இடம் வி.எஃப்.எக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் இப்பாடல் முழுக்க முழுக்க நிஜ லொக்கேஷனில் எடுக்கப்பட்டது என்றால் பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் உள்ள உயுனி என்கிற இடத்தில் தான் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் வரும் இடம் என்பது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. தரை முழுவதும் கண்ணாடி போல் நீர் பரவி இருக்கும் இந்த உப்பு படுக்கைகளில் வானத்துக்கும் பூமிக்கும் வித்தியாசம் காண்பதே கடினம் தான். அந்த அளவுக்கு மிகவும் அழகான ஒரு இடம் இது. குறிப்பாக மழைக்காலத்தில் இந்த இடத்திற்கு செல்வது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு பேரனுபவமாக இருந்து வருகிறது
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது கேமராவால் இந்த இடத்தை ஏதோ சொர்க்கத்தில் இருக்கும் கனவு உலகத்தைப் போல் காட்சிபடுத்தி இருக்கும் விதம், அனிருத்தின் இசை சேர்ந்து இந்தப் பாடலை கவர்ச்சிகரமான ஒரு பாடலாக மாற்றியிருக்கிறது.