மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். 


பாடும் நிலா பாலு 


எஸ்.பி.பி என செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்  பாடல்கள் இல்லாமல் நம்முடைய ஒருநாளும் கழிவதில்லை என்பதே உண்மை. கிட்டதட்ட 6 தசாப்தங்களுக்கு மேலாக 16க்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டதட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். காதல், காமம், அன்பு, பிரிவு, பாசம், ஏக்கம், மகிழ்ச்சி என  அனைத்தையும் தனது காந்த குரலால் கட்டிப்போட்டவர். 


எம்.ஜி.ஆர். தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல்,விஜயகாந்த், விஜய், அஜித் இன்றைக்கு முன்னணி நடிகராக இருக்கும் எவருக்கும் அவர் பாடாமல் இருந்தது இல்லை. எஸ்.பி.பி., என்றாலே அவருடைய குறும்புத்தனம் தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். அவ்வளவு குழந்தைத்தனமான கேரடர்களை நடிப்பிலும் மேடை நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் காணலாம். அந்த அளவுக்கு இருக்கின்ற இடத்தை மகிழ்வாக வைத்திருப்பார். 


சகலகலா வல்லவர் எஸ்.பி.பி., 


பாடகராக மட்டுமல்லாமல் கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். மேலும் பிரபுதேவா, விஜய் ஆகியோருக்கு அப்பாவாகவும், சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அவர் இப்படித்தான் என நாம் ஒரு கூட்டுக்குள் அடைத்து விட முடியாது. அப்படி திரையுலகில் ஒரு சகலகலா வல்லவராக திகழ்ந்தார். எந்த பண்டிகையாக இருந்தாலும் அதில் எஸ்.பி.பி., ஒரு பாடல் பாடியிருப்பார். பாடுவதில் தவறு இருந்தால் எந்தவித சலனமும் காட்டாமல் தவறுகளை திருத்திக் கொள்வார். தான் என்றைக்கும் ஒரு லெஜண்ட் என்ற கர்வம் துளி கூட அவரிடத்தில் இருக்காது. 


தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய  மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரசிகர்களின் இதயத் துடிப்பாக  இருந்தார்.எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ், இளையராஜா , தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான் வரை பழம் பெரும் இசையமைப்பாளர் முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை எந்தவித சமரசமும் இல்லாமல் பாடல்களை பாடியிருப்பார். மழையோ, புயலோ, இடியோ, பனியோ எஸ்.பி.பி., பாடல்கள் இல்லாமல் பயணங்கள் அமையாது. 






எஸ்.பி.பி.,யின் அனைத்து பாடல்களிலும் ஒரு குறும்புத்தனம் ஒளிந்திருக்கும். ஹம்மிங் தொடங்கி நடுவே நடுவே ஒலிக்கும் சின்ன சின்ன இடத்தில் கூட நம்மை வியக்க வைத்திருப்பார். மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை பாடலுக்கு தான் தமிழில் அவருக்கு முதல்முறையாக தேசிய விருது கிடைத்தது. பிறமொழிகளை சேர்ந்து மொத்தம் 6 முறை தேசிய விருது பெற்றிருந்தார். 


அதுமட்டுமல்லாமல் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மாநில அரசு விருதுகள் என மத்திய, மாநில அரசுகளின் உயரிய விருதுகளை அவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. சின்னத்திரையையும் தன்னுடைய ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 


நினைவுகளில் நீங்கா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 


இப்படியான நிலையில் உலக மக்களை மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கிய கொரோனா தொற்றில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒருவர். ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் சேர்ந்த நிலையில் மிகத் தீவிரமான சிகிச்சைப் பிறகு, எதுவும் பலனின்றி அவர் உயிரிழந்தார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் தங்கள் நெருக்கமானவர் மறைந்ததாக எண்ணி துக்கம் அனுசரித்தனர். அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்திய எஸ்.பி.பி., வாழ்வாங்கு மக்களின் நினைவுகளில் இன்றளவும் வாழ காரணமாக உள்ளது. அவரின் தேகம் மறைந்தாலும் இசையின் மூலம் என்றும் அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 




மேலும் படிக்க: Vanangaan First Look: “ஆன்மீகமும் அடிப்படை அறிவும்” - வருகிறான் ‘வணங்கான்’ - முரட்டு லுக்கில் அருண்விஜய்!