தன் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடித்த லால் சலாம் (Lal Salaam) திரைப்படம் நேற்று (பிப்.09) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, கபில் தேவ், தான்யா, அனந்திகா சனில் குமார், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதேபோல் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கவுரிப் பிரியா நடிப்பில் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் லவ்வர்.
இந்த ஆண்டு முதன்முதலாக வெளியாகும் ரஜினிகாந்த் படம் என்பதால் நேற்று திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. மற்றொருபுறம் லவ்வர் திரைப்படம் சத்தமில்லாமல் திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.ரஜினிகாந்தின் நடிப்பு, ஐஸ்வர்யாவின் இயக்கம், படத்தின் இரண்டாம் பாதி, ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை என பல வகையில் லால் சலாம் திரைப்படம் முதல் காட்சி முதலே பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
மற்றொருபுறம் டாக்சிக் காதலை மையப்படுத்தி வெளிவந்துள்ள லவ்வர் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், மணிகண்டன், ஸ்ரீ கவுரிப் பிரியா ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி லால் சலாம் திரைப்படம் இந்தியா முழுவதிலும் 4.3 கோடிகளை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் Sacnilk தளம் பகிர்ந்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொருபுறம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம், நேற்று முதல் நாளில் ரூ.1 கோடி வசூலை அள்ளியுள்ளதாக Sacnik தளம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் திரைப்படத்துடன் வெளியாகி முதல் நாளில் ஒரு கோடி வரை வசூலித்துள்ளது பெரிய விஷயம் என்பதால், இப்படத்தின் அடுத்தடுத்த நாள் வசூலை எதிர்பார்த்துள்ளது கோலிவுட் வட்டாரம்.
மேலும், அடுத்தடுத்து விடுமுறை நாள்கள் வருவதாலும், இரு படங்களுமே நடிப்பு சார்ந்து பாராட்டுக்களை அள்ளி வருவதாலும் அடுத்த சில நாள்களுக்கு வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Sriya Reddy: அண்ணியை நடிக்க வைக்க வேண்டாம் என சொன்ன விஷால்.. நினைவுகளை பகிர்ந்த தருண்கோபி!